ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

“ரூ.6 ஆயிரம் சம்பளம் பத்தல...”- இரும்புத்திரை பட பாணியில் ஆன்லைன் மோசடி... ஐசிஎஃப் ஊழியர்கள் கைது!

“ரூ.6 ஆயிரம் சம்பளம் பத்தல...”- இரும்புத்திரை பட பாணியில் ஆன்லைன் மோசடி... ஐசிஎஃப் ஊழியர்கள் கைது!

கைதான வாலிபர்கள்

கைதான வாலிபர்கள்

Tiruvarur District News : இரும்புத்திரை பட பாணியில் ஆன்லைன் மோசடி செய்த ஐசிஎஃப் ஊழியர்கள் கைது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

நாகை மாவட்டத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் ஐடிஐ முடித்துவிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும்  ஐசிஎஃப் தொழிற்சாலையில் வெல்டர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு மாத சம்பளமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பளம் போதுமானதாக இல்லை என்பதால் வேறு எந்த வழியில் சம்பாதிக்கலாம் என்ற ஆலோசனையில் இந்த நண்பர்கள் 6 பேரும் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், இரும்புத்திரை படத்தை பார்த்த இவர்கள் அந்த பட பாணியில் ஆன்லைன் மோசடியில் ஈடுபடலாம் என்ற முடிவெடுத்து கூகுளில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் தங்களை இணைத்துக்கொண்டு அதில் செல்போன்கள் விற்பனைக்கு உள்ளது என்று பதிவிட்டுள்ளனர்.

அதைப்பார்த்து தொடர்பு கொள்பவர்களை தங்களது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். பணம் செலுத்திய பின்பு அந்த மொபைல் எண்ணை ஸ்விட்ச்ஆஃப் செய்து வேறு சிம்முக்கு மாறுவதுடன் வங்கி கணக்கையும் வேறு ஒரு கிளையில் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : ''மகளிடம் இப்படி நடந்துகொள்ளுங்கள்''அறிவுரை கூறிய மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்!

இவ்வாறாக ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு வங்கி கணக்கு ஒரு மொபைல் எண் என்று தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட தெற்கு வீதியில் செல்போன் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர்  ஒரு வாட்ஸ்அப் குழுவில் மூன்று செல்போன்கள் 39 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினர்.

பிறகு அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் கடந்த 27.01.2022 அன்று 39750 ரூபாய் பணத்தை செலுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களை அடுத்த நாள் தொடர்பு கொண்டபோது மொபைல் எண் ஸ்விட்ச் ஆஃப் ஆகி உள்ளது.

இதனையடுத்து செல்போன் கடை உரிமையாளர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையினரிடம் 29-01-2022 ல் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 10 மாதங்களாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்(22), ஆகாஷ்(22) ஆகியோர் என்பதை கண்டறிந்தனர்.

இதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இருவரையும் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 39 ஆயிரத்து 750 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது பல்வேறு தகவல்களை கூறியுள்ளனர். அதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் படித்த 6 பேரும் சென்னை அருகே பெரம்பூரில் ஒரே அறை எடுத்து அங்கு தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக திருடினால் மாட்டிக் கொள்வோம்; ஆகையால் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டால் தெரியாது என நினைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரை தவிர மற்ற நான்கு நபர்கள் மீது ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை மதுரை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இவர்கள் 6 பேரும் பல நபர்களை ஏமாற்றி உள்ளனர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவாரூர் செய்தியாளர் : ராஜசேகர்

First published:

Tags: Crime News, Local News, Tiruvarur