ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

''நாப்கின் மாற்றக்கூட ஸ்கூல்ல இடமில்லை'' - வேதனையை விவரித்த திருவாரூர் மாணவிகள்!

''நாப்கின் மாற்றக்கூட ஸ்கூல்ல இடமில்லை'' - வேதனையை விவரித்த திருவாரூர் மாணவிகள்!

கருத்துகேட்பு கூட்டத்தில் பேசும் மாணவி

கருத்துகேட்பு கூட்டத்தில் பேசும் மாணவி

Thiruvarur | திருவாரூரில் நடந்த மாநில கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாதவிடாய் காலத்தில் மாணவிகள் நாப்கினை மாற்ற கூட பள்ளிகளில் இடமில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

    திருவாரூரில் நடந்த மாநில கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாதவிடாய் காலத்தில் மாணவிகள் நாப்கினை மாற்ற கூட பள்ளிகளில் இடமில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

    மாநில கல்வி கொள்கை குறித்து திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய நீதிபதி முருகேசன், “மாணவ, மாணவிகள் முதலில் தங்கள் கருத்துகளையும், குறைகளையும் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.

    இதனையடுத்து பேசிய பூம்புகார் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவி, “மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு செல்லவே பயமாக இருக்கிறது. நாங்கள் எட்டு மணி நேரம் பள்ளியில் தான் இருக்கிறோம். மாதவிடாய் காலங்களில் நாப்கினை உரிய முறையில் அப்புறப்படுத்துவதற்கு கூட இடமில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

    இதையும் படிங்க : ரூ.42 கட்டினால் போதும்.. மாதம் ரூ.1000 கிடைக்கும்.. மத்திய அரசு திட்டம் குறித்து பேசிய அண்ணாமலை!

    மேலும் மற்றொரு மாணவி, “எங்கள் பள்ளியில் 3000 மாணவர்கள் கல்வி பயில்கிறோம். ஆனால் அந்த பள்ளியில் 30 கழிவறைகள் மட்டுமே உள்ளன. அதில் 15 கழிவறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. 15 கழிவறைகளில் 3000 மாணவர்களும், 10 நிமிட இடைவேளையில் எப்படி சென்று வர முடியும். எனவே பள்ளிகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

    மேலும் ஒரு மாணவி கண்கலங்கியபடி, “சத்துணவு சாப்பிடுவதற்கே பிடிக்கவில்லை. அங்குள்ள பாத்திரங்கள் சுத்தமாக இல்லை. மேலும் கழிவறைகளும் அசுத்தமாக உள்ளது. கணினி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது. காரணம் வசதியானவர்கள் வீட்டில் கணினி உள்ளது. ஏழ்மையான மாணவர்கள் வீட்டில் கணினி வசதி இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் கேமையும் தடை செய்ய வேண்டும்” என்று பேசினார்.

    தொடர்ந்து வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் பேசுகையில், “எங்கள் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் 20 குழந்தை தொழிலாளர்களை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளார். அந்த குழந்தைகளிடம் நாங்கள் கேட்கும்போது ஆசிரியர்கள் எங்களை அவமானப்படுத்தும் விதமாக உருப்பட மாட்டேன் என்று திட்டியதால் குழந்தை தொழிலாளர்களாக மாறியதாக தெரிவிக்கிறார்கள். எனவே ஆசிரியர்கள் மாணவர்களிடம் இதுபோன்ற நடந்து கொள்ளாமல் அவர்களிடம் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

    இதையும் படிங்க : ’கோயிலை இடித்தால் ரத்தம் கக்கி சாகணும்..’ - பெண் சாமியார் செய்த மிளகாய் அபிஷேகத்தால் பதறி போன போலீசார்..!

    மேலும் ஒரு மாணவி பேசுகையில், “தாய்மொழி வழி கல்வியில் பயில்வதால் எங்களுடைய பேச்சாற்றல், சிந்திக்கும் திறன், எழுத்தாற்றல் ஆகியவை வளர்கிறது. ஆகையால் தாய்மொழி வழி கல்வியை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

    மாநில கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் முன்னிலையில் மாணவிகள் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பியது அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் : கு.ராஜசேகர் - திருவாரூர்

    Published by:Karthi K
    First published:

    Tags: Govt School, Thiruvarur