ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

உயிரிழந்த பேராசிரியரை சிகிச்சைக்கு அனுப்பிய டாக்டர்? திருவாரூரில் பரபரப்பு சம்பவம்..!

உயிரிழந்த பேராசிரியரை சிகிச்சைக்கு அனுப்பிய டாக்டர்? திருவாரூரில் பரபரப்பு சம்பவம்..!

உயிரிழந்த பேராசிரியர், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

உயிரிழந்த பேராசிரியர், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

Crime News : திருவாரூரில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தவரை சீரியஸ் என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக உறவினர்கள் புகார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(47). இவரது மனைவி மாலதி(45). இவர்களது ஒரே மகன் 10ம் வகுப்பு படித்து வருகிறான். சண்முகவேல் குடவாசல் அருகில் உள்ள மஞ்சக்குடி தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இதன் காரணமாக மஞ்சக்குடியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததால் குடவாசலில் உள்ள சங்கரா தன்வந்திரி என்ற எஸ்.டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று காலை அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் குடவாசல் சங்கரா தன்வந்திரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் தீபன் மதுசூதனன் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி அன்று மாலை 3:30 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் தீபன் மதுசூதனன் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி இரவு 7 மணி அளவில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சண்முகவேலை கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து தனது கணவர் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர் தீபன் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது மனைவி மாலதி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் குடவாசலில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் தீபன் மதுசூதனன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் தீபன் மதுசூதனன் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவரது உறவினர்கள் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஓவர்ச்சேரி என்கிற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட எஸ்.டி மருத்துவமனை இன்று காலை முதல் பூட்டப்பட்டு இருக்கிறது. மேலும் மருத்துவர் தீபன் மதுசூதனன் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.

மேலும் அறுவை சிகிச்சையில் உயிரிழந்தவரை உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் என்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : ராஜசேகர் - திருவாரூர்

First published:

Tags: Crime News, Local News, Tiruvarur