Home /News /tiruvarur /

மருத்துவ குணம் நிறைந்தது என விளம்பரம் செய்து உப்பு விற்ற நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்

மருத்துவ குணம் நிறைந்தது என விளம்பரம் செய்து உப்பு விற்ற நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்

இந்து உப்பு

இந்து உப்பு

சாதாரண உப்பை விட இந்து உப்பு மருத்துவ குணம் நிறைந்தது என்ற விளம்பரத்தை பார்த்து உப்பை வாங்கி பயன்படுத்தியதாகவும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

    பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் விளம்பரம் செய்து இந்து உப்பு விற்பனை செய்ததற்காக சென்னைய சேர்ந்த ஏடிஜே கிளாசிக் சாய்ஸ் நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் ஆலடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் திருவாரூர் சஹரா சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏடிஜே கிளாசிக் சாய்ஸ் என்கிற நிறுவனத்தில் இந்து உப்பை 500 கிராம் வாங்கி ஆறு மாதமாக உபயோகித்துள்ளார்.

    உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்,  அதிக சர்க்கரை அளவை குறைக்கும்,  இதயத்தை உறுதியாக்கும்,  தைராய்டு நோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் என்றும் சாதாரண உப்பை விட இந்து உப்பு மருத்துவ குணம் நிறைந்தது எனவும் அந்த நிறுவனம் துண்டு பிரசுரத்தில் விளம்பரம் செய்திருந்ததை நம்பி இந்த இந்து உப்பை வாங்கி பயன்படுத்தியதில் தனக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்  வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    சாதாரண உப்பை விட இந்து உப்பு மருத்துவ குணம் நிறைந்தது என்று இதுவரை எந்த ஒரு அறிவியல் ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. இதுபோல் நுகர்வோர்களை ஏமாற்றும் நோக்கத்தோடு நேர்மையற்ற வணிக நடைமுறையை பயன்படுத்தி விற்பனை செய்துள்ளதை  கண்டித்து இந்த வழக்கை அவர் தொடர்ந்து உள்ளார்.

    இதையும் படிங்க: டிஇஓ அலுவலகத்தில் நுழைந்து வட்டார கல்வி அலுவலரை ஆபாசமாக திட்டி தலைமை ஆசிரியர் ரகளை- கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தவறான வழி நடத்தும் விளம்பரத்தை பொறுத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 இன் படி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு மட்டுமே அதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்த நிறுவனத்தின் மீது விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கு அனுப்பப்படுகிறது என்று தெரிவித்தார்.

    மேலும், தவறான வழி நடத்தும் விளம்பரம் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை செய்துள்ளதற்காக இழப்பீடு தொகையாக 2 லட்சம் ரூபாயை தமிழ்நாடு மாநில நுகர்வோர் நலநிதி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், புகார்தாரருக்கு மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக ரூபாய் 25 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வால் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: செந்தில்குமரன் - திருவாரூர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Consumer tribunal, Salt, Tiruvarur

    அடுத்த செய்தி