மயிலாடுதுறையில் சாலை விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஐயப்பன் (35). இவருக்கு மனைவி வாசுகி மகன்கள் மாதேஷ் (9), தினேஷ் (5) ஆகியோர் உள்ளனர். ஐயப்பன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் மயிலாடுதுறையில் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்த ஐயப்பன், நேற்று காலை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஐயப்பனின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதற்கான ஏற்பாடுகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது.
காவல்துறையையும், இணைத்துக் கொண்டு அதற்கான திட்டத்தை வகுத்தனர் மருத்துவர்கள். அதன்படி நேற்று மாலை 4.30 மணி தொடங்கி 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஐயப்பனின் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். முதலாவதாக இதயம், நுரையீரல் ஆகியவற்றை சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இந்த உடல் உறுப்புகள் அனுப்பப்பட்டன.
ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பாக போலீஸ் வாகனமும் போக்குவரத்தை சரி செய்து கொண்டு விரைந்து சென்றது. திருச்சி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இரவு 10 மணிக்கு சென்னைக்கு விமான மூலம் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதுபோல் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தலா 1 சிறுநீரகம், மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு கல்லீரல் தானமாக எடுத்துச் செல்லப்பட்டன.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டன. ஐயப்பனின் குடும்பத்தினர் உடல் தானம் செய்ய சம்மதித்த நொடியிலிருந்து, உறுப்புகள் தேவைப்படுகின்ற மருத்துவமனை விபரங்களை அறிந்து, அதனை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான திட்டத்தை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகமும், திருவாரூர் மாவட்ட காவல் துறையும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் இணைந்து செயலாற்றி இருப்பது அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இறுதியாக உயிரிழந்த ஐயப்பனின் உடலுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,” திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வதற்காக அதற்கான அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மூலம் செய்யப்பட்டு ஆறு நபர்கள் இதன் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
மேலும் உடல் உறுப்பு தானம் செய்த ஐயப்பனின் குடும்பத்தினருக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் இந்த அறுவை சிகிச்சை பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் டெக்னீசியன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுதலை தெரிவித்தார்.
செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Heart Failure, Organ donation, Thiruvarur