Home /News /tiruvannamalai /

8 மணி நேரத்தில் புதிய தார் சாலை... வெறும் கையால் பெயர்த்து எடுத்த மக்கள்.. திருவண்ணாமலையில் பரபரப்பு

8 மணி நேரத்தில் புதிய தார் சாலை... வெறும் கையால் பெயர்த்து எடுத்த மக்கள்.. திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலையில் தரமற்ற முறையில் 8 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை...

திருவண்ணாமலையில் தரமற்ற முறையில் 8 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை...

Tiruvannamalai | திருவண்ணாமலையில் 35 லட்சம் மதிப்பீட்டில் 8 மணி நேரத்தில் இரண்டு கிலோமீட்டர் நீளத்தில் தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது ஊர்கவுண்டனூர், குட்டூர், பாம்பாத்தூர், பண்ரேவ், கோவில் கொல்லை, இந்திரா நகர், புதூர், அரசனூர், மிட்டதாங்களூர் மலை கிராமங்கள். இங்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊர் கவுண்டனூரில் இருந்து, குட்டூர் செல்லும் 2 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலையை, சீரமைத்து புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி கோரிக்கைகள் வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் "ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில்" இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்ட தார் சாலை அமைப்பதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு செங்கம் "திமுக நகர செயலாளர் அன்பு" இந்த சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்று "ஆதி கன்ஸ்ட்ரக்சன்" நிறுவனத்தின் சார்பில் புதிய தார் சாலை கடந்த ஆகஸ்ட் 8 தேதி பிற்பகல் 12 மணிக்கு போட தொடங்கினர். அன்று மாலை 4 மணி அளவில் பணியை நிறுத்திவிட்டு மறுநாள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் சாலையை அமைத்து முடித்து விட்டனர்.

    இந்நிலையில் இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து செங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஊர்கவுண்டனூர் கிராமத்திற்கு சென்று புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை ஆய்வு செய்தனர். புதிய தார் சாலை அமைக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அந்த சாலையை கை வைத்து பெயர்த்தெடுக்கும் நிலையில் தரம் அற்றதாக அமைக்கப்பட்டது தெரியவந்தது.

    Also see... தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

    உடனே மலைவாழ் கிராம பெண்கள் , ஆண்கள் என சாலையில் கை வைத்து ஜல்லிகளை பெயர்த்து  எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தற்போது ஜவ்வாது மலையில் பெருமளவில் மழை பெய்து வரும் நிலையில் ஒரு மழை வெள்ளத்திற்கு கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு தரமற்ற தார் சாலைகளை ஒப்பந்ததாரர் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் நேற்று ஆகஸ்ட் 17ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மற்றும் தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கிராமத்திற்குச் சென்று புகார் அளித்த மலைவாழ் மக்களிடம் மிரட்டல் விடுத்தனர். இதனால் மலைவாழ் மக்கள் மிகுந்த வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மலைவாழ் மக்களுக்கு மத்திய அரசாங்கம் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நிதிகளை அதிக அளவில் ஒதுக்கினாலும் இது போன்ற அரசு ஒப்பந்ததாரர்கள் மழை பகுதிகளுக்கு தரமற்ற சாலைகளை அமைத்து மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்து மேலும் தரமான புதிய சாலையை அமைத்து தர வேண்டும் என்பதே மறைவாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Road Safety, Thiruvannamalai

    அடுத்த செய்தி