முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / சிறையில் ஏற்பட்ட நட்பு.. கூகுள் மேப் உதவி.. விமானத்தில் தப்பிய ஏடிஎம் கொள்ளைக் கும்பல்.. பரபர பின்னணி..!

சிறையில் ஏற்பட்ட நட்பு.. கூகுள் மேப் உதவி.. விமானத்தில் தப்பிய ஏடிஎம் கொள்ளைக் கும்பல்.. பரபர பின்னணி..!

திருவண்னாமலை ஏடிஎம் திருட்டு

திருவண்னாமலை ஏடிஎம் திருட்டு

திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த 2 பேர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடிக்க சிறையில் திட்டம் போட்டதும் தெரியவந்துள்ளது. கொள்ளை கும்பலின் பின்னணி என்ன?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் கடந்த 12ம் தேதி அதிகாலை 1 மணியிலிருந்து 4 மணிக்குள் 4 ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.

வெல்டிங் கட்டர் மூலம் ஏடிஎம் மெஷின்களை உடைத்து சுமார் 72 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தனிப்படை போலீசார் விசாரணையில், செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு செய்ததில் கர்நாடகா மாநிலம் KGF பகுதியில் கொள்ளையர்கள் தங்கியிருந்துவிட்டு குஜராத் தப்பியது தெரியவந்தது.

விசாரணையில், முகமது ஆரிப் என்பவர் தான் இந்த கொள்ளைத் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. முகமது ஆரிப் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படியே ஹரியானாவை சேர்ந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளையை அரங்கேற்றியுள்ளது. கொள்ளையர்கள் கூகுள் மேப் உதவியுடன் டோல்கேட் இல்லாத பாதையை தேர்ந்தெடுத்து திருவண்ணாமலை முதல் கர்நாடகா மாநிலம் KGF வரை பயணித்துள்ளது தெரியவந்தது.

கே ஜி எஃப் பகுதியில் தாஜ் என்ற சிறிய ஹோட்டலின் மாடியில் ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் குஜராத் மாநிலம் வாதோதரா பகுதிக்கு கொள்ளை கும்பல் தப்பி சென்றுள்ளது. கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மட்டும் பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானா மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் முகமது ஆரிப்பின் செல்போன் சிக்னல் பதிவாகியுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவரது சிக்னலை பின் தொடர்ந்து ஹரியானா சென்ற தமிழக தனிப்படை போலீசார் முகமது ஆரிப் மற்றும் அவரது கொள்ளை கூட்டாளி ஆசாத் ஆகியோரை கைது செய்தனர்.

ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப் ஓராண்டுக்கு முன்பு கார் திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். இந்த முறையும் திருப்பதியில் இருந்த காரை திருடி, அதை திருவண்ணாமலை கொள்ளைக்கு இக்கும்பல் பயன்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முகமது ஆரிப் சிறையில் இருந்தபோது கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா கும்பலுக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்ட நட்பே திருவண்ணாமலை கொள்ளையின் பின்னணி. ஹரியானாவில் சிக்கிய கொள்ளையர்கள் இருவரையும் விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். சிக்கியவர்களிடம் இருந்து 3 லட்ச ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை கைது செய்தால் மட்டுமே, மீதமுள்ள 69 லட்சம் ரூபாய் சிக்கும் என போலீசார் கூறியுள்ளனர். நாளைக்குள் கொள்ளைக்கும்பலை மொத்தமாக பிடித்துவிடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதே கும்பல் வேறு பல மாநிலங்களில் ஏ.டி.எம் கொள்ளையை அரங்கேற்றியிருப்பதும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

First published:

Tags: ATM, Robbery