கார்திகை தீபத்திருவிழாவில் கலந்துகொள்ள திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து சார்பில் 2 ஆயிரத்து 692 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலை நகரில் 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், 52 இடங்களில் கார் பார்க்கிங் செய்ய வாகன நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மற்றும் ஊராட்சி சார்பில் குடிதண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், 17 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மகா தீபத்தன்று, அண்ணாமலையார் கோயில் மலை மீது ஏற பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. அதன்படி, தீபத்திருநாளான்று 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக செங்கம் கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை ஏற விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்பித்து அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திருப்பி கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்து செல்ல கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயில் சார்பில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றக்கூடிய பரணி தீபத்தை காண அடையாள அட்டையுடன் கூடிய 4 ஆயிரம் பக்தர்களும், மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத்திற்கு 6 ஆயிரம் பக்தர்களும் கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Tiruvanamalai