திருவண்ணாமலை அருகே பிரீ பையர் விளையாட்டால் இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், தேவாலயம், பெட்டிக்கடை, வீடு உள்ளிட்டவைகளை சோடா பாட்டில், கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அடித்து நொறுக்கிய கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த பெரியகல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் காலனி பகுதியில் உள்ள மாதா கோவில் அருகில் சிறுவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஃபிரி ஃபயர் விளையாடி உள்ளனர்.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாநகர் காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் போதையில் மாதா கோவில் அருகே வந்து அமர்ந்துள்ளனர்.
ஃபிரி ஃபையர் விளையாட்டில் சிறுவர்கள் மொட்ட சிவா, கெட்ட சிவா என்று பெயர் வைத்து கேம் விளையாடி உள்ளனர். அப்பொழுது மொட்டையை போடு என்று கூச்சலிட்டு உள்ளனர். அண்ணா நகர் காலனி பகுதியைச் சேர்ந்த மொட்டை அடித்த நபர் ஆத்திரமடைந்து கேம் விளையாடிய சிறுவர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரண்டு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனது தம்பியை அடித்த ஆத்திரத்தில் அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், அண்ணா நகர் காலனி பகுதிக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இன்று அருந்ததி காலனி மாதா கோவில் அருகில் அருந்ததி காலனியை சேர்ந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடி அண்ணா நகர் காலனி பகுதியைச் சேர்ந்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அண்ணா நகர் காலனி பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் அடியாட்களுடன் வந்து கற்களைக் கொண்டு தாக்கியதுடன் மட்டுமின்றி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி மாதா கோவிலை உடைத்து உள்ளே கற்கள் மற்றும் சோடா பாட்டில்களை வீசி தாக்கியுள்ளனர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில வீடு மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இந்த தாக்குதலில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த காந்தி, சங்கீதா பிரபா, சபரி முத்து உள்ளிட்ட 4 பேருக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் வெள்ளம்.. 300 ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கியது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், ரமேஷ் உள்ளிட்டவர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பெரிய கல்லப்பாடி கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்த்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் மோதல் நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தப்பியோடிய அண்ணா நகர் காலனி பகுதியைச் சேர்ந்த கலை, குமார், முத்துராசு, ராஜா, பாண்டிதுரை, பாரதி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: சமூக வலைதளங்களில் வைரலாகும் திருடனின் அரை நிர்வாண பேனர்...
இதனிடையே அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை உடனடியாக கைது செய்கிறோம் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.