முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / திருவண்ணாமலை தீபத் திருவிழா... துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது

திருவண்ணாமலை தீபத் திருவிழா... துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது

துர்கை அம்மன் உற்சவம்

துர்கை அம்மன் உற்சவம்

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் வான வேடிக்கைகளுடன் காமதேனு வாகனத்தில் வலம் வந்த துர்க்கை அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Tiruvannamalai, India

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27 ம்தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இந்த தீபத் திருவிழா வெகு விமர்சையாக தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. நிறைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோயில் பின்புறம் உள்ள 2668அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழா: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்!

திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீதுர்க்கை அம்மன் உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனையொட்டி திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் சன்னதியில், ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், அபிஷேகப்பொடி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தோலில் சுமக்கப்பட்டு கோவிலை வலம் வந்த துர்க்கை அம்மன், திருக்கோயிலுக்கு வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வான வேடிக்கைகள் முழங்க மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் துர்க்கை அம்மனை வழிபட்டு சென்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபத் திருவிழா பக்தர்கள் இன்றி திருக்கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றது.

இந்த ஆண்டு அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட்டதை அடுத்து துர்க்கை அம்மன் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாட வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Also see... கார்த்திகை தீபத் திருவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் திருக்கோயில்.. சூப்பர் க்ளிக்ஸ்!

top videos

    இதனைத் தொடர்ந்து இன்று இரவு (25.11.2022) அண்ணாமலையார் திருக்கோவிலின் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.

    First published:

    Tags: Karthigai Deepam, Tiruvannamalai