முகப்பு /செய்தி /Tiruvannamalai / பகலில் படிப்பு, இரவில் ஒப்பாரி பாடல்... பறை இசைத்து பாடி குடும்பத்தை காப்பாற்றும் 9 ஆம் வகுப்பு மாணவன்

பகலில் படிப்பு, இரவில் ஒப்பாரி பாடல்... பறை இசைத்து பாடி குடும்பத்தை காப்பாற்றும் 9 ஆம் வகுப்பு மாணவன்

ஒப்பாரி பாடும் சிறுவன் திலீபன்.

ஒப்பாரி பாடும் சிறுவன் திலீபன்.

Thiruvannamalai : ஒப்பாரி பாடல்களை பாடி இரவு பகலாக உழைத்து வருவது வேதனையை அளித்தாலும், தன் மகனால்தான் குடும்பமே வயிறாற சாப்பிடுகிறோம் என்று நெகிழ்ச்சியாகக் கூறினார் சிறுவனின் திலீபனின் தாய் ராஜேஸ்வரி.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

திருவண்ணாமலையில் குடும்ப வறுமையால் 9ஆம் வகுப்பு சிறுவன் பகலில் பள்ளிப் படிப்பையும், இரவில் பறை இசைத்து ஒப்பாரி பாடல்களை பாடி வருவாய் ஈட்டி, குடும்பத்தையே காப்பாற்றி வருகிறான். இந்த 14 வயது சிறுவனின் ஒப்பாரி பாடலை கேட்டு கண்கலங்காத ஆளே இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறும் நிலையில், சிறுவனின் கல்வி மற்றும் வாழ்வாதாத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமம் மெய்யூர்.  இந்த கிராமத்தில் கடைசியில் அமைந்துள்ள இரண்டு ஆதிதிராவிடர் தெருக்களில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் எழுப்பப்படும் ஒப்பாரி பாடல் மற்றும் பறை இசை என்பது திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னை, திருச்சி, சேலம்  போன்ற தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒலித்து வருகிறது.

மெய்யூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் வீதியில் மஞ்சு குரூப்ஸ் என்ற பெயரில் பெரியமேளம் மற்றும் தப்பாட்ட குழுவை கடந்த 6 வருடங்களாக நடத்தி வருகிறார் மஞ்சுநாதன். இந்தக் குழு திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள், காது குத்தும் நிகழ்ச்சி, வளைகாப்பு மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு குழுவாக சென்று பல்வேறு விதமான இசையால் மக்களை கவர்ந்து சன்மானம் பெற்று, அதிலிருந்து வரும் குறைந்த வருவாயைக் கொண்டு தங்கள் வயிற்றுப் பசி, படிப்புச் செலவு, கல்லூரி கட்டணம் உள்ளிட்டவைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன் தங்களது குடும்பத்தை பாதுகாத்து வருகின்றனர் அரசு பள்ளியில் பயின்று வரும் மெய்யூர் இளைஞர்கள்.

கொரோனா தொற்றால் பலரும் வேலை இழந்து தவித்த நிலையில், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட ராஜேஸ்வரி மற்றும் அவரது மூன்று பிள்ளைகளையும் வறுமை வாட்டி வதைத்தது. இந்நிலையில், அவரது இளைய மகன் திலீபன், ஊரில் உள்ள மஞ்சு குழுவின் பாரம்பரியமான பறை இசையால் ஈர்க்கப்பட்டு குழுவினருடன் இணைந்து பறை இசை இசைத்து தனது குடும்பத்தை காத்து வந்தான்.

கொரோனா காலத்தில் 6ஆம் வகுப்பு படித்து வந்த திலீபனின் குரல் வளமாக இருந்ததாலும் அவனுக்கு ஒப்பாரி பாடல்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாலும், வாழ்வில் பல சாதனைகள் செய்ய படிக்கும் மாணவனின் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, பல ஒப்பாரி பாடல்களை அவனுக்கு ஆசானாக இருந்து கற்றுக்கொடுத்தார் அவனது உறவினர் பாட்டி அஞ்சலை.

துக்க இல்லங்களில் கடந்த காலங்களில் வயதான ஒப்பாரி பாடல்கள் பாடும் பாட்டை பார்த்து இருக்கும் நாம், வளர்ந்து வரும் விஞ்ஞான காலங்களில் இறப்பு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு நேரமில்லாமல், பணிச்சுமை காரணமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சிறுவனின் ஒப்பாரி பாடல்கள் இல்லங்களுக்கு வரும் ஒவ்வொருவரின் ஆழ் மனதில் இருந்து உணச்சியைத் தூண்டி கண்ணீரை வரவழைக்கிறது.

ஒப்பாரி பாடும் சிறுவன்

தற்பொழுது 9-ம் வகுப்பு படித்து வரும் திலீபன் தப்பாட்ட குழுவில் இணைந்ததற்கு பிறகு துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறுவன் பாடும் ஒப்பாரி பாடல்களை கேட்கும் போது, கல் நெஞ்சம் படைத்தவர்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் வரவழைப்பதை நம்மால் காணமுடிகிறது.

இக்குழுவில் உள்ள 12 பேரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள். இவர்கள் மாலை முதல் இரவு முடிய சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பறை இசை இசைத்துவிட்டு, காலையில் பள்ளிக்கு வந்து, தங்களது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்து வருகிறார்கள்.

தங்கள் குடும்ப வறுமை காரணமாக பகுதிநேர வேலையாக பார்த்துக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தொடர்ந்து செய்து வரும் மெய்யூர் க சிறுவர்கள் செல்லும் இடங்களில் பல்வேறு இன்னல்களையும் இரவு நேரங்களில் அனுபவித்து வருவதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய சிறுவனின் தாய் ராஜேஸ்வரி, கணவனைப் பிரிந்து தன் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக தாய் வீட்டிற்கு வந்த எனக்கு, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சூழலில், தன் மகன் ஒப்பாரி பாடல்களை பாடி இரவு பகலாக உழைத்து வருவது வேதனையை அளித்தாலும் கூட, அவனால் தங்கள் குடும்பம் சாப்பிடுகிறோம் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாக வேதனையுடன் கூறினார்.

திலீபனின் தாய் ராஜேஸ்வரி

சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்த பொழுதும், பொய் சொல்லாமல் திருடாமல் உழைத்து தான் வாழ்வதாக கூறுவதாகவும், இதுபோன்று ஒப்பாரி பாடல்கள் பாடினாலும் தன் வாழ்வில் முன்னேற படிப்பையும் தனக்காக சரியாக படித்து வருகிறான் என்றும் கூறினார்.

இது குறித்து பேசிய திலீபன், பறை இசையாலும் ஒப்பாரி பாடல்களாலும் ஈர்க்கப்பட்டு, தான் குடும்ப சூழல் காரணமாக, பகுதி நேர பணியாக இத்தொழிலுக்கு முழுமனதுடன் வந்ததாக கூறினார். இல்லங்களில் இறந்தவருக்கு ஏற்றார் போல் தன் மனதை மாற்றிக்கொண்டு அதற்கு தகுந்த பாடல்களை பாடி வருவதாகவும், அப்போது, துக்கை இல்லங்களுக்கு வருவார்கள் தன்னையும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதாகவும் கூறினார்.

பாடல் உலகில் சிறந்து விளங்கும் இளையராஜா  மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரை நேரில் சந்தித்து, தனது ஒப்பாரிப் பாடல்களைப் பாடி சினிமாத்துறையில் எப்படியாவது கால்பதிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை என்றும் கூறினார்.

திலீபன்

கடந்த காலங்களில் கிழவிகளின் ஒப்பாரி பாடல்கள் இல்லாமல் துக்க நிகழ்ச்சிகள் நடைபெறாது.  இறந்தவர்களின் அருமை பெருமைகளை ஒப்பாரி பாடல்களாக பாடிய கிழவிகளும் அவர்களின் பாடல்களும், இந்த விஞ்ஞான உலகில் மறைந்து வரும் நேரத்தில், பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் வகையில் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் திலீபனின் வசீகரக் குரலால் பாடப்படும் ஒப்பாரி பாடல்கள் துக்க நிகழ்ச்சிகளுக்கு வரும் அனைவரது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைக்கிறது.

குடும்ப வறுமை காரணமாக, வயிற்றுப் பிழைப்பிற்காக  இரவு பகல் பாராமல் தொடர்ந்து பறை இசையையும், தரையில் படுத்து உருண்டும்,  ஒப்பாரி பாடல்களையும் பாடி வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு கல்வி உதவித் தொகையையும், பசுமை வீடும் வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

Must Read : அதிமுக கூட்டத்தில் பேசியது என்ன..? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

தங்களது  துக்கங்களை மறந்து, பல்வேறு துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்று பாரம்பரிய பறை இசையை இசைத்து, ஒப்பாரிப் பாடல்களைப் பாடி அங்குள்ள அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் சிறுவர்களின் வாழ்வில் கண்ட கனவுகளும், ஆசைகளும் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தியாளர் - அ.சதிஷ், திருவண்ணாமலை.

First published:

Tags: Poverty, School boy, Songs, Thiruvannamalai