ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்... போக்கரியை மூடிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..!

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்... போக்கரியை மூடிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..!

பேக்கரி

பேக்கரி

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் முன்புள்ள பிரபல பேக்கரியில் கெட்டுப் போன கேக்-கை விற்பனை செய்ததால் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தைக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேக்கரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஹோட்டல் அசோக் மற்றும் பேக்கரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதம் தனது ஐந்து வயது குழந்தைக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கேக் வாங்கி சென்றுள்ளார். பிறந்தநாள் கேக்கை குழந்தை வெட்டி சாப்பிட்டவுடன் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது.

  இதனைத் தொடர்ந்து மற்றவர்கள் அந்த கேக்கை முகர்ந்து பார்த்த பொழுது கேக் கெட்டுப்போன நாற்றம் வந்ததையடுத்து குழந்தையின் பெற்றோர்,  அந்தப் பேக்கரியில் இது குறித்து முறையிட்டு விளக்கம் கேட்டுள்ளனர்.

  பேக்கரியில் பணி புரியும் ஊழியர்கள் உரிய முறையில் விளக்கம் அளிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர் மற்றும் பொதுமக்கள் அந்தப் பேக்கரியை முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை வரவழைத்து குழந்தை சாப்பிட்ட கேக்கின் மாதிரியை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பேக்கரியை மூடினர்.

  இதனை தொடர்ந்து பேக்கரி முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட கேக் குறித்தும் விற்பனை செய்த மற்ற இனிப்பு வகைகள் கார வகைகள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகள் பரிசோதனை செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also see... ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டில் எலி தலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்...

  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கேக் கெட்டுப் போனது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தொடர்ச்சியாக கெட்டுப்போன உணவு, பொரியலில் எலி தலை, இதனால் உயிரிழப்பு பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருவண்ணாமலையின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cake, Thiruvannamalai