ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் முழுவீச்சில் முன்னேற்பாடு பணிகள்

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் முழுவீச்சில் முன்னேற்பாடு பணிகள்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

Tiruvannamalai News : கோயிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது.

  அண்ணாமலையார் சன்னதியில், 64 அடி உயர கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 தினங்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

  நிறைவு நாளான வரும் டிசம்பர் 6ம் தேதி அதிகாலை திருக்கோயிலின் கருவறையின் முன்பு சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

  இதையும் படிங்க : முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய உதயநிதி... முடிவை மாற்றிய கமல் ஹாசன்!

  தீபத்திருவிழா பூர்வாங்க பணிகள் செய்ய, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனோ பரவல் காரணமாக மாடவீதியில் சாமி உலா நடைபெறாமல் 5ம்  பிரகாரத்தில் நடைபெற்றதால் பல்வேறு சாமி வீதி உலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.

  ஆகவே இந்தாண்டு கொரோனா பரவல் எல்லாம் முடிவடைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெற உள்ளதால் சாமி வீதி உலா நடைபெற உள்ள வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  குறிப்பாக சாமி மற்றும் அம்பாள் திருவிழா தினமான 10 தினங்களும் காலை மாலை என இரு வேலைகளிலும் இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷாமிருகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

  அதன்படி தீபத் திருவிழா உற்சவமான நவம்பர் 27ம் தேதி காலை முதல் டிசம்பர் 6ம் தேதி இரவு வரை சாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் 1000 கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

  தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் 7ம் நாள் திருவிழா அன்று மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

  இதையும் படிங்க : நண்பனை ஜாமீனில் எடுக்க கைவரிசை - அடகு கடையில் திருட சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  கோயிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

  செய்தியாளர் : சதிஷ் - திருவண்ணாமலை

  Published by:Karthi K
  First published:

  Tags: Karthigai Deepam, Tiruvannamalai