Home /News /tiruvannamalai /

15 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணத்தை தவறவிட்ட பயணி.. பாதுகாத்து ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..

15 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணத்தை தவறவிட்ட பயணி.. பாதுகாத்து ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..

அரசு பேருந்து ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..

அரசு பேருந்து ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..

கைப்பையை பஸ்சில் தவறவிட்ட பெண்ணிடம் மீண்டும் ஒப்படைத்த பிறகுதான் எனக்கு மன நிம்மதி ஏற்பட்டது என்றார் ஓட்டுநர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலையில் பயணி ஒருவர் பேருந்தில் தவறி விட்ட பணம், நகைகளை பத்திரமாக பாதுகாத்து ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 5ம் தேதி காலை 8.15 மணி அளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை செல்வதற்காக கண்டக்டர் இல்லாத அரசு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ஏறி பயணித்துள்ளார்.

    இந்த பேருந்தை திருவண்ணாமலை அடுத்த அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்த ஓட்டுனர் சிவக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பிற்பகல் 12.15 மணிக்கு சென்ற அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிச்சென்றனர். இதையடுத்து, ஓட்டுனர் சிவக்குமார் திருவண்ணாமலை செல்லும் இடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார்.

    பின்னர் 20 நிமிடம் கழித்து பேருந்து உள்ளே சென்று பார்த்தபோது, ஓட்டுநர் சீட்டுக்கு பின்பக்கம் பை ஒன்று இருந்துள்ளது.  சந்தேகத்துடன் அந்த பையை எடுத்து பார்த்தபோது, அதற்குள் நகை, பணம் மற்றும் செல்போன் இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர், யார் மறந்து விட்டு சென்றார் என தெரியவில்லையே என குழம்பினார்.

    பின்னர், அதிலிருந்த செல்போனை எடுத்து பார்த்தபோது, பயன்பாட்டில் இருந்துள்ளது. மேலும் யாராவது அந்த செல்போனுக்கு போன் செய்தால் அவர்களிடம் விசாரிக்கலாம் என காத்திருந்தார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு செல்வதற்காக பேருந்தின் பெயர் பலகையை மாற்ற செய்ய ஓட்டுனர் சிவக்குமார் பேருந்துக்குள் சென்றுள்ளார்.

    அப்பொழுது  பிற்பகல் 12.43 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் அழுகையுடன் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்தின் அருகே நின்று கொண்டுள்ளார்.
    அதைக்கண்ட ஓட்டுநர் சிவக்குமார் அந்த பெண்ணை அழைத்து விசாரித்தார்.

    அப்போது  நான் பயணித்த அரசு பேருந்தில் கைப்பையை  தவறவிட்டு விட்டேன். அதில் 15 பவுன் நகை,  செல்போன் மற்றும் 3 லட்சம் பணம் இருந்தது எனக்கூறி கதறி அழுதுள்ளார். அவரை சமாதானம் செய்த ஓட்டுநர் சிவகுமார் உங்கள் நகை, பணம் தொலைந்து போகவில்லை எனக்கூறி, பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்து கண்காணிப்பாளர் முன்னிலையில் அந்த பெண்ணிடம் கை பையை  ஒப்படைத்தார்.

    தவறவிட்ட கை பையை ஒப்படைத்தவுடன் அதில் அனைத்தும் சரியாக உள்ளதா? என பார்க்குமாறு  கூறினார். அவரும் பார்த்துவிட்டு எல்லாம் சரியாக உள்ளது எனக்கூறியதோடு , ஓட்டுனருக்கும் பேருந்து நிலைய கண்காணிப்பாளரும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.

    இதைக்கண்ட அங்கிருந்த பயணிகளும், ஊழியர்களும் ஓட்டுநர் சிவக்குமாரின் நேர்மையை  கண்டு வியந்து, அரசு போக்குவரத்து கழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் எனக்கூறி பாராட்டு தெரிவித்தனர்.  மேலும்  இதுகுறித்து டிரைவர் சிவக்குமார் கூறுகையில், 2007ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியில் சேர்ந்து திருவண்ணாமலை, தேனிமலை பணிமனையில்  பணிபுரிந்து வருகிறேன்.

    சென்னை கோயம்பேடு நடத்துனர் இல்லா சொகுசு பேருந்தில் ஓட்டுனராக பணி செய்து கொண்டிருப்பதாகவும், பேருந்தில் கைப்பையை தவறவிட்ட பெண் பேருந்தில் ஏறும்போது அதிக பைகளை கையில் வைத்திருந்தார். இறங்கும்போதும் இவர் கடைசி நபராக இறங்கினார். இதனால் அவரின் முகம் மனதில் பதிந்து விட்டதால் தவறவிட்ட கைப்பை அவருடையதுதான் என எதிர்பார்த்தேன்.

    அதேபோல் அந்த பெண் மீண்டும் தேடி வந்த போதுதான் உறுதி செய்து, அவரை அழைத்து விசாரித்து அவரிடம் ஒப்படைத்தேன்.  கைப்பையை பஸ்சில் தவறவிட்ட பெண்ணிடம் மீண்டும் ஒப்படைத்த பிறகுதான் எனக்கு மன நிம்மதி ஏற்பட்டது என்றார்.

    மேலும் இதுபோன்று நகை, பணம் தொலைந்து போனதையும், பேருந்து நிலையத்தில் உடல்நிலை சரியில்லாத நபரையும் காப்பாற்றி மனித நேயத்துடனும், அர்ப்பணிப்போடும் ஓட்டுனர் பணியை மேற்கொண்டு வரும் சிவக்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    செய்தியாளர் - சதீஷ் அண்ணாமலை
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Tiruvannamalai

    அடுத்த செய்தி