Home /News /tiruvannamalai /

ஆரணியில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு....

ஆரணியில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு....

 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள்

8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள்

Arani | திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த துந்திரீகப்பட்டு, விளைசித்தேரி ஆகிய கிராமங்களில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர், சோழர் காலச் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Arani (Arni), India
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி–சேத்துப்பட்டு சாலையில் விளைசித்தேரி கிராமத்தின் சாலையோரம் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சிற்பத்தினை ஆய்வுசெய்த சம்புவராயர் ஆய்வு மையத்தின் செயலாளர், பேராசிரியர் அ. அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆரணி ஆர்.விஜயன் ஆகியோர் இச்சிற்பம் கி.பி.8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்காலக் கொற்றவை சிற்பம் என்பதை உறுதி செய்தனர். அத்துடன் இக்கோயிலுக்கு அருகிலேயே (மேற்கில்) விஷ்ணு அல்லது சிவன் எனக் கருதக்கூடிய சிலையொன்று இருப்பதையும் கண்டறிந்தனர்.

    மேலும் இதே போல, இவ்வூருக்கு அருகில் உள்ள துந்தரீகம்பட்டு கிராமத்தில் சாலைக்கு உள்ளே சுமார் 100 அடி தொலைவில் விளைநிலத்தில் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர்கள் கலைப்பாணியிலான கொற்றவை சிற்பம் ஒன்று இருப்பதையும் கண்டறிந்தனர்.

    இச்சிற்பங்கள் குறித்து பேராசிரியர் அ. அமுல்ராஜ்  தெரிவிக்கையில், விளைச்சித்தேரி கிராமத்தில் சாலையோரம் உள்ள காளியம்மன் சிற்பம் பல்லவர்கால மக்கள் வழிபட்ட கொற்றவைச் சிலையாகும். தலையில் கிரீடம், வலதுமேல்கரத்தில் பிரயோக சக்கரம், இடதுமேல் கரத்தில் சங்கு ஆகியவை காணப்படுகின்றன.

    காதுகளில் மகர குண்டலங்கள், மார்பு கச்சை, முப்பிரிகளாலான தோள்வளை, கைவளை ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன. வலதுகீழ்கை அபய முத்திரையாக உள்ளது. இடதுகீழ்கை, இடது தொடைமீது தட்டிய வலம்பாதம் நிலையில் உள்ளது. உடலில் முட்டிவரை நீண்ட ஆடையுடன் எருமைத் தலைமீது பாதங்களை வைத்தபடி இச்சிற்பம் காணப்படுகிறது.

    இச்சிற்பத்திற்கு அருகில் மேற்குப்புறமாகப், பிற்காலப் பல்லவர் கலைப்பாணியிலான சிலையொன்று காணப்படுகிறது. தலையில் கிரீட மகுடம், காதுகளில் மகரகுண்டலங்கள் உள்ளன. வலதுகீழ்கை அபயமுத்திரை தாங்கியுள்ளது. இடதுகீழ்கை தட்டிய வலம்பாதமாக உள்ளது. கைகளில் தோள்வளை, மார்பில் இரண்டு ஆரங்கள்,
    வயிற்றில் உதரபந்தம், பூணூல் ஆகியவை காணப்படுகிறது. இச்சிற்பம் விஷ்ணு அல்லது சிவனாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர். இதுமேலும் ஆய்வுக்குரியது.

    மேலும் இதே போன்று துந்திரீகம்பட்டு கிராமத்திற்கு கிழக்கில் தெற்குத் திசையில் சாலையிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் விளைநிலத்தில் கொற்றவை எனும் காளி சிற்பம் ஒன்று வழிபாட்டில் உள்ளது.

    இச்சிலையை ஆய்வுசெய்தபோது, இது கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிற்காலச் சோழர்காலத்தைச் சார்ந்த கொற்றவை சிற்பம் எனக் கண்டறியப்பட்டது. எட்டு கைகளுடன் காட்சித்தரும் இச்சிற்பத்தின் தலையில் கரண்ட மகுடம், பின்புறம் பிரபை ஆகியவை உள்ளன. மேல்வலது கையில் சூலத்தைத் தாங்கி மகிஷாசூரனை குத்துகின்ற காட்சி காட்டப்பட்டுள்ளது. மற்றகரங்களில் சக்கரம், கத்தி, சங்கு, கேடயம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. காதுகளில் நீண்ட வட்டவடிவிலான பத்ர குண்டலங்கள் உள்ளன. எருமைத் தலைமீது நின்ற கோலத்தில் இச்சிற்பம் காணப்படுகிறது.

    Also see... தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய 400 கிலோ கஞ்சா பறிமுதல்...

    படைவீடு, ஆரணி போன்ற பகுதிகளில் சம்புவராய மன்னர்களின் வரலாற்றுத் தடயங்கள் பெருமளவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பல்லவர் காலத்தைச் சார்ந்த சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்றவை இதுவரை குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் இப்பகுதிகள் பல்லவர்கள் ஆட்சியின்கீழ் இருந்துள்ளது என்பதை உறுதிசெய்வதற்கான முக்கியத் தரவுகளாக இச்சிற்பங்கள் உள்ளன எனத் தெரிவித்தார்.

    செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arani

    அடுத்த செய்தி