Home /News /tiruvannamalai /

குகைக்குள் பாம்பு பாதுகாப்பில் இருந்த பலகோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கொள்ளை... அதிர்ச்சியில் பக்தர்கள்

குகைக்குள் பாம்பு பாதுகாப்பில் இருந்த பலகோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கொள்ளை... அதிர்ச்சியில் பக்தர்கள்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

Tiruvannamalai: தானிப்பாடி பகுதியில் உள்ள குகை கோவில் இருந்த 200 ஆண்டு காலம் பழமையான கோடிக்கணக்கான மதிப்புள்ள 10 ஐம்பொன் சிலை கொள்ளை குறித்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில் மலை அடிவாரத்தில்  பச்சையம்மன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து 150 அடி தூரத்தில் பாறை இடுக்கில் குகையில் சித்தப்படையார் குகை கோவில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள்  பழமையான இந்த கோவிலில் ஒரு நபர் மட்டுமே உள்ளே சென்று பூஜை செய்து வழிபட முடியும். இந்த குகை கோவிலில் 200 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன், ஈஸ்வரி இரண்டு சிலைகளும், ஈஸ்வரன் தனியாக ஒரு சிலையும், வீரபத்ர சுவாமி ஐந்து சிலையும், விநாயகர், முருகர் என ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் கொண்ட 10 ஐம்பொன் சிலைகள் வைத்து வழிபாடு செய்துள்ளனர்.

பழமையான இந்த கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆனி மாதம் பௌர்ணமி தினத்தன்று குகை கோவிலுக்கு சென்று மூன்று பானைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பஞ்சலோக சிலைகளை வெளியே எடுத்து வழிபாடுகள் செய்து மீண்டும் அதே குகைக்குள் பானையில் வைத்து விட்டு சென்று விடுவார்கள்.

மூன்றாண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழாவில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடன்கள் மொட்டை அடித்தல், காது குத்துதல், பொங்கல் வைத்து வழிபாடு செய்தல் என பல்வேறு வழிபாடுகளை செய்வார்கள்.



இந்த குகைக்குள் இருந்து எடுக்கப்பட்ட சிலைகளை நேரடியாக தென்பெண்ணை ஆற்றங்கரை கொண்டு சென்று பங்கு அபிஷேகம் செய்து அதனை மீண்டும் ஊர்வலமாக மலமஞ்சனூர் புதூருக்கு கொண்டு வந்து புது பால் என்ற விழா கொண்டாடுவார்கள். மறுநாள் மீண்டும் புது பானையில் வைத்து  அதே குகைக்குள் வைத்து விடுவார்கள்.

இந்தக் குகைக்குள் சென்று சிலைகளை எடுக்கும் நபர் ஒன்பது முதல் 15 நாட்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று பஞ்சலோக சிலைகளை எடுத்து சிறப்பு வழிபாடுகள் செய்து மீண்டும் அதே குகைக்குள் மூன்று பானைகளில் வைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.



இந்த ஆண்டு பூஜை செய்வதற்காக கடந்த 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் கோவில் நிர்வாகி மற்றும் ஊர் பொதுமக்கள் குகை கோயிலுக்கு சென்று உள்ளனர். அப்பொழுது குகை கோவில் உள்ளே செல்லும்போது சிலைகள் வைக்கப்பட்டிருந்த பானைகள் மட்டும் உடைந்து காணப்பட்டுள்ளது.

10 ஐம்பொன் சிலைகளும் காணாமல் போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகியான ஆலடியான் உடனடியாக தானிப்பாடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குகை கோவிலுக்கு வந்த கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குகை கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சென்னையில் இருந்து சிலை திருடு போன குகை கோவில் மற்றும் மலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதை படிக்க: ஆடி மாத முதல் நாள் - வீட்டிலேயே அம்மன் வழிபாடு செய்வது எப்படி?

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “ தலைமுறை தலைமுறையாக 200 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சித்தப்படையார் வழிபாடு செய்து வருவதாகவும், கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாத பௌர்ணமி அன்று வழிபாடு செய்து பின்னர் குகையில் 10 ஐம்பொன் சிலைகளும் வைத்ததாகவும், மீண்டும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்தன்று தீபம் போடும்பொழுது புகைக்கும் வெளியில் இருந்து தீபாராதனை காட்டும் பொழுது பானைகள் அனைத்தும் உடையாமல் இருந்துள்ளதாகவும், தற்பொழுது பார்த்தபோது பானைகள் உடைக்கப்பட்டு இருந்ததாகவும் இந்த திருட்டு சம்பவம் ஆறு மாதங்களுக்குள் நடந்திருக்கலாம்” என தெரிவித்தனர்.



இதேபோல் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பத்து ஐம்பொன் சிலைகளும் காணாமல் போய் 27 நாட்கள் கழித்து அதே கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சாமி குறி சொல்லி தோண்டி எடுத்து வழிபட்டதாகவும் தற்பொழுது இரண்டாவது முறையாக ஐம்பொன் சிலைகள் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் சிலை காணாமல் போன பன்னிரண்டாம் தேதி சாமியிடம் குறி கேட்டதாகவும் சிலை குறித்து எதுவும் கூறவில்லை என தெரிவித்தனர். தமிழக அரசும் முதலமைச்சரும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரும் துரித நடவடிக்கை எடுத்து பழமை வாய்ந்த எங்களின் வீரபத்திரன், ஈஸ்வரன், ஈஸ்வரி உள்ளிட்ட 10 ஐம்பொன் சிலைகளையும் மீட்டு தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



மேலும் இந்த சிலையை குகைக்குள் பாம்புகள் பாதுகாத்து வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.  குகைக்குள் சென்று பார்த்தபோது அங்கு நல்ல பாம்பின் தோல் மற்றும் பாம்பு இருந்த காட்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Idol Theft, Thiruvannamalai

அடுத்த செய்தி