திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 15ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து சதிகல் சிற்பங்களை சம்புவராயர் வரலாற்று ஆய்வு மைய அறக்கட்டளையை சேர்ந்த முனைவர் அ.அமுல்ராஜ் மற்றும் ஆர்.விஜயன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் தெரிவிக்கையில், “ஆரணி - கண்ணமங்கலம் சாலையில் உள்ளது சேவூர் கிராமம். இவ்வூரிலிருந்து முள்ளண்டிரம் கிராமத்திற்கு சாலை பிரியும் இடத்தில் பாலமுனீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலின் கருவறை சுவற்றுக்கு அருகில், வடக்கு பக்கமாக 2 நடுகற்கள் காணப்படுகின்றன.இவை, சதிகல் எனப்படும் உடன்கட்டை ஏறியதன் நினைவாக வைக்கப்பட்டது ஆகும்.
இந்நடுகற்கள் கி.பி 15ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தை சேர்ந்தவையாகும். முதலாவதாக (வலதுபுறம்) உள்ள சிற்பத்தில் வீரன் ஒருவன், உயர்ந்த ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்தபடி உள்ளார். இடதுகாலை மடக்கியும், வலதுகாலை கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்த நிலையில் அவர் காட்டப்பட்டுள்ளார். மடக்கிய இடது காலை ஒட்டி இடது கையில் நீண்ட வாள் காணப்படுகிறது. வலதுகை மேலே உயர்த்திய நிலையில் தலை வாரிக் கொண்டையிடப்பட்டுள்ளது.
மேலும் காதணி, இடுப்பில் அரையாடை போன்றவையும் காட்டப்பட்டுள்ளன. அமர்ந்துள்ள நிலையை வைத்து இவர் முக்கிய தளபதியாகவோ, அமைச்சராகவோ இருந்திருக்கலாம் எனக் கருதமுடிகிறது. இப்பகுதிகளில் கண்டறியப்பட்ட நடுகற்களில் இதுபோன்று கற்பலகை ஆசனத்தின் மீது அமர்ந்த நிலையிலான சிற்பங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வீரனுக்கு அருகில் ஒரு பெண் நின்ற நிலையில் காணப்படுகிறாள். வலதுகையை உயர்த்தியும், இடதுகையை கீழே தொங்க விட்ட நிலையிலும் உள்ள இச்சிற்பத்தில் கால்வரை நீண்ட ஆடையும் அள்ளிமுடிந்த கொண்டை பின்புறமாகவும் காட்டப்பட்டுள்ளது.
மேலும் 2வதாக உள்ள சிற்பத்தில் வலதுபுறம் நிற்கும் ஒரு வீரனும் அவருக்கு இடதுபுறம் ஒரு பெண் உருவமும் காணப்படுகிறது. வீரனின் வலது கையில் கீழ்நோக்கிய நீண்ட வாள் உள்ளது. தலையில் கொண்டை, காதணி, கழுத்தணி, தோள்வளை, முன்கைவளை, காலில் தண்டை, இடுப்பில் அரையாடை ஆகியவை காணப்படுகின்றன. முகம் சிதைந்துள்ளது. இவ்வீரனுக்கு அருகில் உள்ள பெண்ணின் வலகை, வீரனின் இடதுகையைப் பற்றிக்கொண்டுள்ளது. தலையில் கொண்டை, நீண்ட காதணி, கால்வரை நீண்ட ஆடை, காலில் தண்டை ஆகியவை காணப்படுகின்றன.
மக்களின் வழிபாட்டில் உள்ள இச்சிற்பங்கள் வீர வழிபாட்டின் தொடர்ச்சியாகும். பழங்காலத்தில் போர்க்களத்தில் எதிரிகளோடு சண்டையிட்டு வீரச்சாவு அடைந்தவர்கள் மக்களால் போற்றப்பட்டனர். இறந்த இடத்தில் அவர்களுக்கும் அவரோடு உடன்கட்டை ஏறிய வீர மகளிர்களுக்கும் கல்லில் பெயரும் புகழும் எழுதி சிலை எடுத்து வழிபடப்பட்டது என்பதற்கு சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் சான்றுகளாக உள்ளன. இத்தகைய சிறப்புக்குரிய இச்சிற்பங்கள் யாவும் பாதுகாப்பட வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக தொல்லியல் துறையும் ஆரணியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது வரலாற்றாய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
செய்தியாளர் : மோகன்ராஜ் - ஆரணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruvanamalai