அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று கூறியுள்ள சசிகலா, தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் வருவேன் என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இடையே மோதல் போக்கு நீடித்து வருவகிறது. இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் என தன்னை வி.கே.சசிகலா கூறி வருகிறார். அவர் வசிக்கும் இல்லத்தை முகாம் அலுவலகம் என குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருவதில் சசிகலா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று தியாகராயா நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கிண்டி கத்திப்பாரா வழியாக போரூர் சாலை திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி, குமணஞ்சாவடி, திருமழிசை, வெள்ளவேடு பாக்கம், தாமரைபாக்கத்தில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சசிகலா சந்தித்தார்.
அவருக்கு திருத்தணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அரசு கொறடாவான பி. எம். நரசிம்மன் தலைமையில் கட்சி தொண்டர்கள் வழிநெடுக அதிமுக கொடிகளை நட்டும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து தாமரைப் பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, பெண்கள் அரசியலில் இருந்தால் இது போன்ற வழக்குகள் எல்லாம் வரும். ஜெயலலிதா பார்க்காத வழக்கா இதை எதிர்கொண்டு வருவது தான் அரசியலுக்கு அழகு. நிச்சயம் இதனை எதிர் கொண்டு நான் வருவேன்.
தமிழகம் ரவுடிகளின் கூடாரமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. லாட்டரி சீட்டு விற்பனை, போதைப்பொருட்கள் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்கமுடியாத அரசாக திமுக அரசு உள்ளது என்று தெரிவித்தார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என கூறிய சசிகலா, தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமையாக இருக்க வேண்டும் அது தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாக இருக்க வேண்டும். பணபலம் படையை பலம் தலைமையை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும் தொண்டர்கள் பலமும்தான் தலைமையை தீர்மானிக்கும்’ என பேசினார்.
மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு எனக்கூறி அறிவிக்கப்படாத மின்வெட்டு தற்போது உள்ளது. சொத்து வரியை 150சதவீதம் உயர்த்தியதாகவும் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பதாக சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகவும் திராவிட செயல்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம் என்றும் சசிகலா விமர்சித்தார்.
உள்ளாட்சி இடை தேர்தலில் தனிபட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னத்தை முடகுவதா என்றும் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பிய அவர். விரைவில் ஒரு நல்ல முடிவு வரும் கழகத்தினர் ஒற்றுமையாக செயல்பட்டால் அதிமுக முன்புபோல் வலிமை பெறும் என கூறினார்.
செய்தியாளர்: பார்த்தசாரதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, AIADMK, VK Sasikala