திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் தவறி விழுந்து கடந்த 24-ம் தேதி உயிரிழந்து விட்டார். மல்லிகா உடலை அடக்கம் செய்த இரண்டு தினங்களுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் கிராமத்தையே தூக்கம் இல்லாமல் செய்துள்ளது.
மல்லிகாவின் எதிர் வீட்டில் வசிக்கும் ராபர்ட், தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். அந்த சிசிடிவியில் மல்லிகாவின் ஆவி உலாவுவது பதிவாகி இருப்பதாக தகவல் பரவ கிராமமே பரபரப்பாகி விட்டது. சிசிடிவியில் நிழல் போன்ற கருப்பு நிற உருவம் பதிவாகியுள்ளது. மல்லிகாவின் வீட்டிற்குள் இருந்து வெளிவரும் கருப்பு நிற உருவம், அந்த தெருவை சுற்றி சுற்றி வருகிறது.
தலையை சீவிய படி இளம்பெண் ஒருவர் தெருவில் நிற்க, அந்த பெண்ணை சுற்றியே கருப்பு நிற உருவமும் நிற்பது போல சிசிடிடி காட்சியில் பதிவாகியுள்ளது.
மல்லிகா வசித்த தெருவில் மல்லிகை பூ வாசனை வருவதாகவும், கூடவே ஜல் ஜல் என கொலுசு சத்தமும் கேட்பதாக சிலர் கொளுத்தி போட, அப்பகுதியே பரபரப்பாகி விட்டது. செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவ தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இதையும் படிங்க; Erode East By
poll 2023 : ஈரோடு கிழக்கு மகுடம் யாருக்கு? மகன் விட்டு சென்ற பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடருவாரா..
இரவில் சாதாரணமாக தெரு நாய்கள் குரைப்பதையும் சிசிடிவியுடன் சேர்த்து தகவல் பரவ, பேய் நடமாடுகிறது என அக்கிராமமே நம்ப ஆரம்பித்து விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தனியாக வெளியே செல்லவே அச்சப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இரவில் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
இரவு நேரத்தில் மட்டுமின்றி பகலிலும் அவ்வழியாக செல்லும் போது ஏதாவது சத்தம் கேட்டால் ஆவியாக இருக்குமோ என்று பயப்படுகின்றனர். சிசிடிவி காட்சிகள் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பரவ, பயத்தில் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி விட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என ஒட்டுமொத்த மாவட்ட அதிகாரிகளும் இது குறித்து பேச ஆரம்பித்தனர். ஆனால், உண்மை தலைகீழ். ராபர்ட் என்பவர் பொறுத்திய சிசிடிவி கேமிரா மீது சிலந்தி வலை கட்டியிருந்ததே பேய் நடமாட்டம் போல காட்சியளிக்க காரணம் என்பது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சிசிடிவி காட்சிகளை எப்படி பரவ விட்டாய் என ராபர்ட் மீது கோபமடைந்துள்ளனர். பேய் பயத்தில் கிராம மக்கள் கிலியான விவகாரம் இப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV Footage, Fear, Thiruvallur