நள்ளிரவில் வீட்டிற்குள் நுழையும் டவுசர் கொள்ளையர்கள்.. அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்
நள்ளிரவில் வீட்டிற்குள் நுழையும் டவுசர் கொள்ளையர்கள்.. அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்
திருவள்ளூரில் வடமாநில டவுசர் கொள்ளையர்கள் - சிசிடிவி வீடியோ
பொன்னேரி அருகே வடமாநில டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டியை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள தடபெரும்பாக்கத்தில் வசித்துவரும் புருசோத்தமன் ஹேமமாலினி என்பவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்த டவுசர் கொள்ளையர்கள் இருவர் வீட்டினை நோட்டமிட்டபடி கையில் இரும்பு கம்பியை வைத்தபடி திருட முயற்சி செய்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
உள்ளே ஆட்கள் இருந்ததால் கதவை திறக்க முடியாமல் திரும்பிச் சென்ற அவர்கள் அருகில் இருந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் என்பரது வீட்டில் 13,000 ரூபாய் கொடுத்து ஆசையாய் வாங்கி வளர்த்து வந்த சிறிய குட்டி நாயை மயக்க மருந்து கொடுத்து திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியுள்ள இருவரின் உருவத்தை வைத்து வட மாநில டவுசர் கொள்ளையர்களா? என போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து பொன்னேரி தசரதநகர் பகுதியில் கடந்த சில நாட்களில் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற நிலையில் டவுசர் கொள்ளையர்கள் தற்போது அட்டகாசத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு கொள்ளை சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.