திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஆன்லைனில் வேலை தேடும் பெண்களை குறிவைத்து ஏமாற்றி பல லட்சம் பணமோசடியில் ஈடுபட்ட டெலிவரி பாய் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கோவில் பதாகையை சேர்ந்தவர் சத்யா ( வயது 24 ) என்பவரின் கணவர் பிரேம்குமார். சத்யா கடந்த மே மாதம் வீட்டில் இருந்து வேலை செய்வதற்காக ஆன்லைன் மூலமாக வேலையை தேடி வந்துள்ளார். அப்போது OLX செயலி மூலமாக வார சம்பளத்திற்கு வீட்டிலிருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலையை பற்றி விளம்பரத்தை கண்டறிந்துள்ளார் சத்யா. அந்த விளம்பரத்தில் 5 வருடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், வார சம்பளம் மாதம் 5000 முதல் 8000 வரை சம்பாதிக்கலாம் என வாட்ஸ் அப் மூலம் தகவல் கிடைத்ததாகவும் அதன்மூலம் முன் பின் தெரியாத நபர் தன்னை தொடர்பு கொண்டு 5,000 முன் பணம் செலுத்தினால் வேலை உறுதி செய்யப்படும் என தெரிவித்தாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் தனக்கு 60 லட்ச ரூபாய் லாட்டரி அடித்ததாக, தன்னிடம் தெரிவித்ததாகவும் அந்த பணத்தை பெறுவதற்கு முன்பணமாக ரூ.7.5 லட்சம் வரிச்சலுகை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதை நம்பி இவரிடம் இருந்த தங்க நகையை அடமானம் வைத்து 6 லட்ச ரூபாயை அடையாளம் தெரியாத நபர் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பரிசுத்தொகையை கேட்ட போது அந்த நபர் அவரது நிறுவனம் லாட்டரி முறையை ரத்து செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஏற்கனவே செலுத்திய பணத்தை விடுவிக்க ரூபாய் 5000 செலுத்துமாறு கேட்டுள்ளார்.
ALSO READ | உதய் உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள்.. உடற்பயிற்சிதான் காரணம் - மு.க.ஸ்டாலின்
சந்தேகமடைந்த சத்யா ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் மோசடி செய்த நபரின் கைபேசி எண்ணை ஆய்வு செய்த போது தண்டையார்பேட்டையை சேர்ந்த மதன்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி கொண்டே, ஆன்லைன் மூலம் வேலை தேடுபவர்களை, இது போன்று பண மோசடி செய்வது தெரிய வந்தது.
மதன் குமாரை கைது விசாரணை செய்த போது, அவர் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர், அவரை நீதிமன்றதில் ஆஜர்ப்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த ஆவடி ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தரணி பாய் மற்றும் காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் : கன்னியப்பன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online crime, Thiruvallur