ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

வீடு புகுந்து திருடி விட்டு உரிமையாளரிடமே லிப்ட் கேட்ட பலே திருடன்.. ஆவடியில் பரபரப்பு!

வீடு புகுந்து திருடி விட்டு உரிமையாளரிடமே லிப்ட் கேட்ட பலே திருடன்.. ஆவடியில் பரபரப்பு!

சிக்கிய கொள்ளையன்

சிக்கிய கொள்ளையன்

நகையை திருடிவிட்டு சாலையில் கூலாக நடந்தது மட்டும் இல்லாமல், உரிமையாளரிடமே லிப்ட் கேட்டுள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Avadi | Thiruvallur (Tiruvallur)

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடி விட்டு வீட்டின் உரிமையாளரிடமே லிப்ட் கேட்ட திருடனை, பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவடியை அடுத்த வீராபுரம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெனின் ராஜதாஸ்(34) ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை இவர், வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி வித்யாவுடன் மோட்டார் சைக்கிளில் இறைச்சி வாங்க கடைக்கு சென்றார். சுமார் அரை மணிநேரம் கழித்து இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளிப்பதற்காக ஜெனின் ராஜதாஸ் தனது பைக்கில் காவல் நிலையம் புறப்பட்டார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் ஒருவர், ஜெனின் ராஜதாசிடம் பைக்கில் லிப்ட் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க | கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

அந்த நபர் மீது சந்தேகம் அடைந்த ஜெனின் ராஜதாஸ், மர்மநபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பியோட முயற்சித்தார்.

பின்னர் ஜெனின் ராஜதாஸ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மர்மநபரை மடக்கி பிடித்து சோதனை செய்தார். அதில், அவரது சட்டை பையில் வீட்டில் திருடுபோன நகை மற்றும் வெள்ளி கொலுசுடன், 100க்கும் மேற்பட்ட திருட்டு சாவிகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


First published:

Tags: Avadi, Crime News, Local News, Theft, Thiruvallur