பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் கார்த்திகை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் கவசம் இல்லாமல் சுயம்புவாக தோன்றிய ஆதிபுரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கார்த்திகை தீப உற்சவம் என்பது சுயம்புலிங்கமாக புற்று வடிவில் தோன்றிய ஆதிபுரீஸ்வரர் மிகவும் பழமை வாய்ந்தவர். 5000 ஆண்டுகளுக்கு முன்பு தானாக தோன்றியதாகவும் ராமனின் மகன் லவா பிரதோஷம் தினத்தன்று இங்கு வந்து வழிபட்டார் எனவும் கோவில் ஸ்தல புராணம் கூறுகிறது.
இந்த மூன்று நாட்களும் ஆதிபுரீஸ்வரருக்கு மகாபிஷேகம், புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை மூன்று தினங்கள் மட்டுமே கவசம் இன்றி சுவாமியை பரிபூரணமாக தரிசிக்க முடியும். இதனால் பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள்.
கோவிலுக்கு திருவொற்றியூர் உதவி ஆணையர், ஆய்வாளர்கள் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தேவையான தரமான சாம்பிராணி, தைலம், திருக்கோவில் மூலமே விற்பனை செய்யப்படும்.
மேலும் வெளியிலிருந்து கொண்டு வரும் சாம்பிராணி, தைலம் அபிஷேகத்திற்கு ஏற்றுக்கொள்ள மாட்டாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன் கிழமை மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் துவங்கிய இந்நிகழ்வானது வெள்ளிக்கிழமை டிசம்பர் 9ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நிறைவுபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பிரபலமாக நடைபெறும் இந்த நிகழ்வில் எப்போதும் நடிகைகளும் அரசியல் பிரபலமும் பங்கேற்பார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், சசிகலா, நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் இந்த மூன்று நாட்களில் சாமியை வழிபடுவதற்காக கோவிலுக்கு வழக்கமாக வருவார்கள் என எதிர்பார்ப்பப்படுகிறது.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குழுவாக வருவார்கள் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பிலும் பக்தர்களுக்கு தேவையான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய்களை கொண்டு சோதனை உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: அசோக் குமார், திருவெற்றியூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous, Hindu Temple, Thiruvallur