Home /News /tiruppur /

Tirupur | ஜவுளி உற்பத்தியில் "ஸ்டார்ட் அப்"நிறுவனங்களுக்கு பலம் கொடுக்கும் திருப்பூர் அடல் இன்குபேஷன் மையம்

Tirupur | ஜவுளி உற்பத்தியில் "ஸ்டார்ட் அப்"நிறுவனங்களுக்கு பலம் கொடுக்கும் திருப்பூர் அடல் இன்குபேஷன் மையம்

ஜவுளி உற்பத்தி

ஜவுளி உற்பத்தி

Tirupur | திருப்பூர் முதலிபாளையம் அடல் இன்குபேஷன் மையத்துக்கு மத்திய அரசு வழங்கிய சிறப்பு அங்கீகாரம் மூலம் பல 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கான அடல் இன்குபேஷன் மையம், திருப்பூர் முதலிபாளையம் டெக்கிக் வளாகத்தில் கடந்த 2017 முதல் இயங்கி வருகிறது. ஆடை உற்பத்தி துறையில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பெருக்கத்துக்கு இன்குபேஷன் மையம் கைகொடுத்துவருகிறது. பல்வேறு புதுமைகளை தொழில்முனைவோர், இதன் உதவியுடன் உருவாக்கியுள்ளனர்.

இதுவரை, நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, திருப்பூர் இன்குபேஷன் மையம் கைகொடுத்துள்ளது. இந்த மையத்துக்கு, மத்திய அரசின் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம், சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்மூலம், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் வெற்றிகரமாக காலுான்றுவதற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திறனும் இன்குபேஷன் மையத்துக்கு கிடைத்துள்ளது. அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது, ’ஆடை உற்பத்தி துறை சார்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை உருவாக்குவது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கைகொடுப்பதே அடல் இன்குபேஷன் மையத்தின் முக்கிய நோக்கம்.

தொழில்நுட்ப ஜவுளி, மருத்துவ ஜவுளி என ஏராளமான புதுவகை ஆடை தயாரிக்கும் 'ஸ்டார்ட் அப்'களை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. பனி பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவ வீரர் உள்ளிட்டோருக்கு கதகதப்பு தன்மை அளிக்கும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட ஆடை, மெத்தை போன்றவை அவசியமாகிறது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலை, கல்லுாரிகளுடன் இன்குபேஷன் மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் பாலக்காடு ஐ.ஐ.டியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நம்மிடமுள்ள ஆடை உற்பத்தி நுட்பங்கள், கல்வி நிறுவனங்களிடமுள்ள நவீன தொழில்நுட்பங்கள் இணையும்போது, புதுமையான எலக்ட்ரானிக் ஆடை ரகங்களை உருவாக்குவது சாத்தியமாகிறது.

சாம்பிள் இன்டர்லாக் நிட்டிங் மெஷின், டிஜிட்டல் ஜக்கார்டு நிட்டிங் மெஷின், டெனீம் நிட்டிங் மெஷின், ஷூக்களின் மேற்பாகம் தயாரிப்புக்கு கைகொடுக்கும் பிளாட் நிட்டிங் மெஷின், இயற்கை சாய பொடி தயாரிப்பு மற்றும் துணிக்கு இயற்கை சாயமேற்றும் மெஷின், ஆய்வகம் என எல்லா வகையான கட்டமைப்புகளுடன் ஒரு முழுமை பெற்ற இன்குபேஷன் மையமாக மாறியுள்ளது.

'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், இன்குபேஷன் மையத்திலேயே புதுமையான ஆடை ரகங்களை தயாரித்து, ஆராய்ச்சிக்கும் உட்படுத்திக் கொள்ளமுடியும். தொழில்முனைவோரின் யோசனைகள், ஜவுளித்துறையின் எத்தகைய பிரச்னைக்கு தீர்வாக அமையும்; செயல்வடிவம் கொடுத்து, சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் தொழில்முனைவோருக்கு, அவர்களிடமுள்ள திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து, பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, இன்குபேஷன் மையம் சார்பில் 20 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

'ஸ்டார்ட் அப்' அங்கீகாரம் கிடைத்துள்ளதால், இனி, இன்குபேஷன் மையத்திலேயே, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், குறைந்த வட்டியில், 30 லட்சம் ரூபாய் வரை எளிதாக கடன் பெறமுடியும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாடு, சந்தைப்படுத்துதலுக்கு இந்த கடன் தொகை கைகொடுக்கும். இன்குபேஷன் மையம் மூலம், ஆடை உற்பத்தி சார்ந்த ஏராளமான 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. மதிப்பு கூட்டுதல்களுடன் கூடிய புதுமையான ஆடை தயாரிப்பு மூலம் வர்த்தகமும் பெருகும். புதிய தொழில்நுட்பங்கள் வருகையால், பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tirupur

அடுத்த செய்தி