திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியானது செம்பு, பித்தளை, தாமிரம், சில்வர் போன்ற பாத்திரங்களின் உற்பத்திக்கு ஏற்ற இடமாகும். திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்களின் வீடுகளில் நடக்கும் முக்கிய விசேஷங்களுக்கு பாத்திரங்கள் வாங்க அனுப்பர்பாளையத்திற்க்கே வருகின்றனர்.
திருவண்ணாமலை, மதுரை, இராமேஸ்வரம் போன்ற முக்கிய கோவில் தலங்களில் அனுப்பர்பாளையம் பாத்திரக்கடை என்ற பெயர்ப் பலகையோடு நிறைய கடைகளை நம்மால் காண முடியும். அந்த அளவிற்கு இங்கு உற்பத்தி செய்யப்படும் பித்தளை, செம்பு, தாமிரம் ஆகிய பாத்திரங்கள் தரமானதாகவும், விலை குறைவானதாகவும் இருக்கும். இப்பகுதியில் வசிக்கும் நூற்றில் 80 சதவீதம் மக்கள் பரம்பரை பரம்பரையாக பாத்திரங்கள் செய்வது, ஈயம் பூசுவது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் தற்பொழுது வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் எடை குறைவான பொருட்களான சில்வர் பொருட்கள், பீங்கான் பொருட்கள் ஆகியவை பயன்பாட்டில் அதிகம் உள்ளதால் எடை அதிகமான பித்தளை, தாமிரம் போன்ற பொருட்களை மக்கள் விரும்புவதில்லை. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் முக்கியமானதாக தமிழ்நாடு திகழ்கின்றது.
வீடு, கோவில், திருமண மண்டபங்கள் என அனைத்து முக்கியமான விழாக்களிலும் பித்தளை செம்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. சீர், சடங்கு என முக்கிய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அங்கு பித்தளைக்கு தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். குழந்தை பிறந்து தொட்டிலில் போடும் நிகழ்ச்சி முதல் இறுதி ஊர்வலம் நிகழ்ச்சி வரை பித்தளை பாத்திரத்தின் பயன்பாடு நம் கலாச்சாரத்துடன் ஒன்றி உள்ளது.
ஆனால் தற்பொழுது எவர்சில்வர் பாத்திரங்கள், பீங்கான் பாத்திரங்கள் என நாகரிகத்தின் அடுத்தகட்டமாக நாம் பயன்படுத்தும் பொருட்கள் மாறியுள்ளது. முக்கியமாக பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தும் பொழுது ஈயம் பூசாமல் பயன்படுத்த முடியாது மற்றும் ஈயம் தேயும் பொழுது மீண்டும் ஈயம் பூசுதல் பணி நடைபெற்று ஆகவேண்டும். இதனால் இந்த தொழிலில் இருந்தோர் சிறப்பாக தங்களது தொழிலை நடத்தி வந்தனர். பொங்கல் பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் என்ற முக்கிய நிகழ்ச்சிகள் வரும் பொழுது மட்டுமே பித்தளை மற்றும் தாமிர பாத்திரங்களின் விற்பனைகள் கூடுகின்றது. இல்லையெனில் மந்தமான சூழ்நிலை நிலவுகின்றது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், முன்னர்போல் யாரும் பித்தளை மற்றும் தாமிரம் ஆகிய தொழில்களில் ஈடுபாடு காட்டுவதில்லை. .தற்போது இந்த தொழிலில் உள்ள அனைவருமே பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை நடத்தி வருவதாகவும் அல்லது 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உள்ளனர். இளைஞர்கள் இந்தத் தொழிலில் அதிகமாக ஈடுபடுவதில்லை என்றும் மேலும் வேலை செய்ய சரியான ஆட்கள் கிடைக்காததால் உதிரி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் விற்பனை சரிவர இல்லாததாலும் தங்களது தொழில் முடங்கும் அபாயத்தில் உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
வீடு, கோவில், சத்திரம் என அனைத்து பகுதிகளிலும், பித்தளை பாத்திரம் பயன்பாடு அதிகளவு இருந்தது. அதனால் ஈயம் பூசும் தொழிலும் சிறப்பாக இருந்தது. தற்போது பயன்பாடு பெருமளவு குறைந்து திருமண மண்டபம், கோவில் மற்றும் பள்ளிவாசல்களில் மட்டும் உள்ளது. பித்தளையில் உணவு சமைக்கும் போது, தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உணவும் கெடாது. சூடும் அதிக நேரம் இருக்கும்.
ஈயம் பூசுவதற்கு, நவச்சாரம், நாக தகடு உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. ஈயம் காய்ச்சப்பட்டு நவச்சாரம் அழுக்கு எடுக்கவும், ஈயம் ஒட்ட நாகதகடு பயன்படுத்தப்படுகிறது. ஈயத்தை தீயில் காய்ச்சிதிரவமாக மாற்றி குளிர்விக்கப்படுகிறது. பின்னர் பாத்திரத்தையும் தீ வழியாக சூடாக்கி, நவச்சாரம், ஈயம், நாக தகடு கலந்த கலவை பூசப்படுகிறது.
ஈயம் 100 கிராம் 550 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாத்திரங்கள் பெருமளவு குறைந்துள்ளதால் ஒரு சிலர் மட்டுமே ஈயம் பூச வருகிறார்கள். இத்தொழில் செய்பவர்கள் யாரும் தற்போது இல்லை. வரும் தலைமுறைக்கு பித்தளை பாத்திரங்கள், ஈயம் பூசுவது குறித்து தெரியாத சூழல் உள்ளது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, திருப்பூரில் நூல் விலை உயர்வின் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வைக்கின்றன. இந்நிலையில் திருப்பூரின் முக்கிய தொழிலாக இருக்கும் பாத்திரம் செய்யும் தொழிலும் பாதிக்கப்படுவதால் திருப்பூர் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirupur