திருப்பூர் மாவட்ட குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி (வயது 52). இவருக்கும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 35 வயதான தேவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கு அடிக்கடி தகராறு வந்ததால் சுப்பிரமணி தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார். நாம இந்த ஊர்ல இருக்க வேண்டாம் திண்டுக்கல்லுக்கு போயிடலாம் என தேவி அழைத்துள்ளார். சுப்பிரமணி திண்டுக்கல் செல்ல மறுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் வந்துள்ளது. அப்போது அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி , கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அவரை தேடி திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தேவிக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தவர்கள் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
சுப்பிரமணிக்கு தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த புரோக்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான தேவி நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தேவிக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணமான நிலையில் 3-வதாக சுப்பிரமணியை திருமணம் செய்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.அந்த திட்டம் நிறைவேறாததால் சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்துள்ளார். கொலை முயற்சியும் நிறைவேறாததால் நாமக்கல்லுக்கு தப்பி சென்று 4-வதாக ரவி என்கிற ராமன் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
நாமக்கல்லை சேர்ந்த ரவிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. கோடீஸ்வரரான இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தார். இதையடுத்து 2-வது திருமணம் செய்து வைக்க அவருக்கு உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். இதையறிந்த தேவி, ரவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். சுப்பிரமணியை விட ரவியிடம் அதிக பணம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்த தேவி, சுப்பிரமணி இதற்கு தடையாக இருப்பார் என்பதால் அவரை விஷ ஊசி போட்டு கொன்று விட்டு ரவியை திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார்.
சுப்பிரமணியை கொலை செய்தால் அவரது சொத்துக்களும் கிடைத்து விடும் என்பதால் கடந்த 15-ந்தேதி விஷ ஊசியை சுப்பிரமணிக்கு செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணி உயிர் பிழைத்து கொண்டதால், போலீசில் சிக்காமல் இருக்க நாமக்கல்லுக்கு தப்பி சென்ற தேவி கடந்த 27-ந்தேதி ரவியை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சொத்துக்களை அபகரிக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தேவி இதுபோன்று பல ஆண்கள், தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்திருக்கலாம் என தெரிகிறது. அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Marriage, Tamil News, Tiruppur