வேலைவாய்ப்பின்மை, தகுதிக்கேற்ப வேலை இல்லாதது என வேலையில்லாத் திண்டாட்டங்கள், காலம் காலமாக நம் நாட்டில் உள்ள மிகப் பெரிய பிரச்சினையாகும். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வேலை இழப்பு, சுய தொழில் முடக்கம் என மிகப்பெரும் பொருளாதார சரிவை சந்திக்க நேர்ந்தது.
இதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பிற்கு ஏற்ப வேலைகளை தேர்ந்தெடுப்பதில் மிகப் பெரிய சிரமம் உள்ளது. நிறுவனங்கள் அன்றாடம் "வான்டட்" விளம்பரங்களை வெளியிடுவது நம்மால் செய்தித்தாள்களிலும், போஸ்டர்களிலும் காணமுடிகின்றது. அதேபோல, படிப்பிற்கேற்ற வேலை தேடும் இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதையும் நம்மால் காண முடிகின்றது. இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதில் தான் இங்கு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது.
இதனை சரி செய்ய தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமிழக அரசானது ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் திருப்பூர் காங்கேயத்தில் ஜூலை 2ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி ,திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், மகளிர் திட்ட அலுவலகம் ஆகியன சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெறுகின்றது.
முகாமில் 200 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிகிரி ,பொறியியல், கணினி பயின்றவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயின்றவர்கள், தொழிற் கல்வி பயின்றவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, அயல் நாட்டு நிறுவனத்தின் மூலம் அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தில் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த முகாமில் பங்கேற்க இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கான பணி நியமன ஆணையை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்க உள்ளனர். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:0421-299152,94990-55944
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruppur