ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூர் காப்பகத்தில் 3 குழந்தைகள் பலியான சம்பவம் - காரணம் என்ன? தீவிர விசாரணை

திருப்பூர் காப்பகத்தில் 3 குழந்தைகள் பலியான சம்பவம் - காரணம் என்ன? தீவிர விசாரணை

உணவு விஷமானாதால் 3 சிறுவர்கள் பலி

உணவு விஷமானாதால் 3 சிறுவர்கள் பலி

திருப்பூர் ஆதரவற்றோர் விடுதியில் உணவு விஷமானாதால் 3 குழந்தைகள் பலியான நிலையில், சம்பவயிடத்தில் அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதை செந்தில்நாதன் (70) என்பவர் நிர்வாகித்து  வருகிறார். இந்த காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் தாய் அல்லது தந்தை இழந்த  15 குழந்தைகள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு தினந்தோறும் காப்பகத்தில் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருகிறது. ஒரு சிறுவன் தனது வீட்டிற்கு சென்ற நிலையில் 14 பேர் மட்டும் இருந்துள்ளனர். இவர்களுக்கு ரசம் சாதம் இரவு உணவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளியே இருந்து பெறப்பட்ட  லட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதே உணவை அங்கிருந்த வார்டன்   கோபி கிருஷ்ணனும் உண்டுள்ளார்.  சாப்பிட்ட சிறிது நேரத்தில் 14   சிறுவர்கள் மற்றும் வார்டன் ஒருவர் என 15 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

சிலருக்கு காய்ச்சலும் இருந்துள்ளது. இதனால் டோலோ மாத்திரை பாதி அளவு கொடுக்கப்பட்டுள்ளது. காலை காப்பக ஊழியர்கள் சென்று பார்த்த போது  மாதேஷ் மற்றும் அத்தீஸ் என இரண்டு சிறுவர்கள் காப்பகத்திலேயே உயிரிழந்தனர். மற்ற சிறுவர்கள் வாந்தி பேதி என மயக்கமடைந்து காணப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து அனைவரையும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு இரண்டு பேர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்  மேலும் ஒரு பாபு என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாதிப்படைந்த 11 சிறுவர்கள் மற்றும் வார்டன்   மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருமுருகன் பூண்டி போலீசார் காப்பகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 3 சிறுவர்கள் உயிரிழந்ததால் 174(3) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.   இதனிடையை சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் உட்கொண்ட உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள் சதீஷ் கூறுகையில் "சிறுவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்பட்டதாகவும் குளுகோஸ் செலுத்தப்பட்டதாகவும் தற்போது சிறுவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்" என தெரிவித்தார். மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சமூகநலத்துறை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனையடுத்து திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அம்பிகா உள்ளிட்டோர் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகள் பதிவேடு, உணவு மற்றும் அன்றாட வழக்கங்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் காப்பகத்தில் முழுமையாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாலை செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 சிறுவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: ”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!

பின்னர் சிறுவர்களிடமும் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், "மூன்று மாணவர்கள் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தனர்

நான்கு மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில் தனியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லமுறையில் சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

மீதுமுள்ள சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லகூடிய அளவில் இருக்கிறார்கள். உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடற்கூராய்வு முடிந்த பின் தான் உணவில் ஏற்பட்ட கோளாறா வேறு ஏதாவது பிரச்சனையா என்பது தெரிய வரும். மூன்று பேர் இறப்பு என்பது வருத்தமாக இருக்கிறது நேற்று முன்தினம் முதலே உணவில் தான் பிரச்சனை என அனுமானத்தின் மூலம் தெரிய வருகிறது.

காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால் மூவரின் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இது காலம்கடந்த வருத்தமான சூழ்நிலையாக இருக்கிறது. முதல்வர் சமூகநலத்துறை அமைச்சரை அனுப்பியுள்ளார். அதிகாலை நேரத்தில் மருத்துவமனையில்  நலம் விசாரித்து ஆய்வு மேற்கொள்வர்" என தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் உடற்கூறாய்வு சோதனை துவங்கி உள்ளது.

Published by:Kannan V
First published:

Tags: CM MK Stalin, Food poison, Tirupur