தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச்சின் விலை குறித்து அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் மதுவால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். திமுகவிற்கு மாற்று பாஜகதான். பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் இருந்து எத்தனை எம்பிக்களை தர உள்ளோம் என்பதுதான் கேள்வி. மக்கள் எண்ணம் வாக்காக மாற கட்சியின் தொண்டர்கள் உழைக்க வேண்டும்.
இதையும் படிக்க : ரஃபேல் வாட்ச் : ரசீதை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா? - அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி விடுத்த கெடு!
இன்று தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்சினை என்ன என கேட்டால் ஊழல் என்றுதான் சொல்வார்கள். இந்த ஊழலின் ஆழம் ஒரு தலைமுறையை அழிக்கிறது. அண்ணாமலை வாட்ச்சின் பில் கேட்கிறார்கள். நான் அதனை தருவதற்கு நேரம் சொல்லி விட்டேன். இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியில் உள்ள திமுக, சாமானிய மனிதனை பார்த்து பில் கேட்கிறார்கள். இந்த வாட்ச்க்கு பில் மட்டும் இல்லை, 13 ஆண்டுகள் சம்பாதித்த முழு கணக்கையும் கொடுக்கிறேன். எனக்கு 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வந்துள்ளது. 13 லட்சம் கிரெடிட் கார்டு பில் கட்டி உள்ளேன். தனி வலைதளத்தில் இதை முழுமையாக வெளியிடுகிறேன்.
அதே பிரஸ் மீட்டில் திமுக பினாமி அமைச்சர்கள் சொத்து கணக்கையும் வெளியிடுகிறேன். முதல்வர் முதல் திமுகவில் உள்ள அனைவரும் சேர்த்த 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து விவரங்களின் தகவல்களை சேர்த்து உள்ளனன். இதனுடன் முதல்வர் ஸ்டாலின் மகன் லெக்சஸ் கார் வாங்கிய பில் சேர்த்து வெளியிடுகிறேன். திமுக அமைச்சர் தனியாக போர்ட் வைத்துள்ளார். இந்தோனேசியாவில் துறைமுகம் வைத்துள்ளனர்.
இதனுடன் முதல்வரின் மருமகன் அணிந்த 12 லட்சம் வாட்ச், முதல்வர் என்னென்ன வாட்ச் அணிந்தார் என வெளியிடுகிறேன். திமுக அமைச்சர், எம்எல்ஏக்கள் வைத்துள்ள இன்ஜினியரிங் காலேஜ் உடன் 150 ஏக்கர் நிலம் என ஒவ்வொன்றையும் பேச வேண்டிய நேரம் இது. திமுகவினர் இரண்டு தலைமுறை வளர்ச்சிக்கான தொகையை ஊழல் செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது என மேடையில் அமர்ந்திருந்த ஏபி முருகானந்தம் சொன்னார். நான் அந்த ஒப்பீடு வேண்டாம் என்றேன். ஆனால் திமுக எம்ஜிஆரை கிண்டல் செய்தது வாட்ச் வைத்து தான். அதில் வைரம் உள்ளது. ஒட்டு கேட்க முடியும் என பரப்பினர். இப்போது என்னையும் அதே வாட்ச் வைத்து கிண்டல் செய்கின்றனர். இது நமக்கு ஒரு வாய்ப்பை வைத்து திமுகவின் மொத்த ஊழலையும் வெளிகொண்டு வருவோம்.
மு.க.ஸ்டாலின் 120 கோடி வீடு எப்படி வந்தது என கேட்போம். சாராய அமைச்சருக்கு வழக்கில் ஆஜராகும் வக்கீலுக்கு ஒவ்வொரு முறையும் 25 லட்சம் ரூபாய் சம்பளம் அது எங்கிருந்து வந்தது என கேட்போம். இந்தியாவில் ஊழலில் நம்பர் ஒன் தமிழ்நாடு. ஊழலை எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக தான். உதயநிதி அல்ல இன்பநிதி வந்தாலும் வாழ்க என கே.என்.நேரு சொல்கிறார். நீங்கள் அடிமையாக இருக்க தயாராக உள்ளீர்கள். தமிழகம் அடிமையாக இருக்க முடியாது. மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என தைரியத்தால் அப்படி பேசுகிறார்கள்.
திருமண வீட்டில் ஆவின் வருவாய் உயர்ந்துள்ளது என பெருமையாக தெரிவிக்கிறார் முதல்வர். ஆனால் விலையை உயர்த்தி விட்டு குறைந்த விற்பனையை அதிகம் என பேசுகிறார். மக்கள் நிலை முதல்வருக்கு தெரியவில்லை தங்க தட்டில் தான் சாப்பிடுகிறார் போல. ஆவின் பால் விலை உயர்வால் 5 லட்சம் லிட்டர் விற்பனை குறைந்துள்ளது. ஆரஞ்சு பால் பாக்கெட்டில்தான் புரதச்சத்து உள்ளது. அதிகமாக வாங்கும் அந்த பாலின் விலை உயர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளின் புரதச்சத்து குறைகிறது. அவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
ஏப்ரலுக்கு பிறகு நமது நடைபயணத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்க உள்ளேன். ஊழல் தான் தமிழகத்தின் நிலையாக இருந்தது. அதை பாஜக மாற்றுகிறது” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, DMK, Rafale deal, Rafale jets