ஹோம் /நியூஸ் /Tiruppur /

Tiruppur : மழை நேரங்களில் சாயக் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலந்துவிடும் சாயப்பட்டறைகள்.. தீர்வு எப்போது?

Tiruppur : மழை நேரங்களில் சாயக் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலந்துவிடும் சாயப்பட்டறைகள்.. தீர்வு எப்போது?

திருப்பூர் - நொய்யல் ஆறு

திருப்பூர் - நொய்யல் ஆறு

Tiruppur District : நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதாகவும் இதனால் தங்கள் நிலங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் பல வருடங்களாக நொய்யல் ஆற்றின் கரையோர மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்த ஆறுகளில் ஒன்றாக திகழ்கிறது. கோயம்புத்தூர் நகரைக் கடக்கும் போது அந்நகரின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. திருப்பூரை கடக்கும் போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து இந்த ஆற்றினை மிகவும் மாசடையச்செய்கின்றன. சுத்திகரிக்கப்படாத சாயப் பட்டறைக் கழிவுகளால் அதிக அளவு அமிலங்கள் சேர்ந்து திருப்பூருக்கு பின் நொய்யல் ஆறு வேளாண்மைக்கும், குடிப்பதற்கும் ஏற்றதாக இல்லாமல் போய்விடுகிறது. மனிதர்களுக்கும், மண்ணிற்கும் பயன்படாத ஆறாக மாறியதால் நொய்யலை இறந்த ஆறு என்றே கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி திருப்பூர் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதாகவும் இதனால் தங்கள் நிலங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் பல வருடங்களாக நொய்யல் ஆற்றின் கரையோர மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை விசாரித்த  நீதிமன்றம் அனைத்து சாயப்பட்டறைகளிலும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சாயப்பட்டறைகளை மூடியது.

இதனைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாகி வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

மேலும், திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் நிறுவன உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

இரண்டு நாட்களாக திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக சக்தி தியேட்டர் அருகில் உள்ள பாலம் நீரில் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதுமட்டுமின்றி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் அருகில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டுள்ளனர்.

பல வருடங்களாக சொல்லியும் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதாகவும், இந்த கழிவுகள் சாக்கடைகளில் கலந்து சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் நடப்பதற்கு கூட சிரமப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர்: காயத்ரி வேலுசாமி, திருப்பூர்

First published:

Tags: Tiruppur