Home /News /tiruppur /

Tirupur | அவிநாசி அருகில் சேதமடைந்த நிலையில் 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில்- புதுப்பிக்க முயற்சி எடுக்க சமணர் சங்கம்

Tirupur | அவிநாசி அருகில் சேதமடைந்த நிலையில் 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில்- புதுப்பிக்க முயற்சி எடுக்க சமணர் சங்கம்

திருப்பூர் பழமையான சமணர் கோவில்

திருப்பூர் பழமையான சமணர் கோவில்

திருப்பூரில் அவினாசி அருகிலுள்ள 1,100 ஆண்டுகள் பழமையான அமணீசர் கோவிலை புதுப்பிக்க தமிழ் சமண சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

  திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து புஞ்சை புளியம்பட்டி செல்லும் சாலையில் புளியம்பட்டியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் ஆலத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1,100 ஆண்டுகள் பழமையான அமணீசர் கோவில் என்ற சமணர் கோவில் உள்ளது. பண்டைய கொங்குநாட்டின் வடபரிசார நாட்டில், அக்கால வணிகர்கள் பயன்படுத்திய பெருவழியில், இந்த கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன், மைசூரு பகுதியில் இருந்து வந்த சமண மதத்தினர், இங்கு குடியேறி, ‘வீரசங்காக பெரும்பள்ளி அணியாதழகியார்’ என்ற சமணர் கோவிலை கட்டினர்.

  இந்த கோவில் தான் தற்போது அமணீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. சமணர்கள் தாங்கள் தங்கிய ஊர்களில் பல பள்ளிகளை ஏற்படுத்தி, வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தனர். இதற்கு உதாரணமாக, ஆலத்தூர் அருகே விண்ணப்பள்ளி, புங்கம்பள்ளி, பனையம்பள்ளி போன்ற ஊர்கள் மெய்ப்பிக்கின்றன.     இன்றும் கொங்கு நாட்டில் பின்பற்றப்படும் பல சடங்குகள் சமண மதத்தை சேர்ந்ததுதான். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில், கி.பி. 10–ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் மூன்றும், கி.பி. 13 மற்றும் 14–ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

  இதன் மூலம் அரசு வருவாய் நிர்வாகத்தை அறிந்து கொள்வதற்கும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கும் சிறப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சான்றாக உள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  திருப்பூர் சமண கோவில்


  ஒரு ஏக்கர் பரப்பளவில், முழுவதும் கற்களால், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட இக்கோவில், தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. சமணர்களின் வாழ்வியல் நுட்பங்கள், கல்விச்சேவை, கொங்கு சோழர்கள் பலர் திருப்பணி செய்தது, பழமையான வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் மூலம் ஏராளமான செய்திகளை தாங்கியிருந்த இக்கோவில், அடையாளத்தை இழந்து வருகிறது.

  நம்முடைய பண்டைய நிர்வாகத்தையும், பெண்களுக்கு சம பங்கு கொடுத்தமையையும் பற்றி பேசும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகள் உடைய அமணீசர் கோவில் கருவறை முற்றிலும் சிதிலம் அடைந்துள்ளது. முன் மண்டபமும் பராமரிப்பு இன்றி சிதிலமாகி கற்கட்டுமானங்கள் பெயர்ந்து மொத்தமாக கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் மீது ஏராளமான பெரிய மரங்கள் வளர்ந்து உள்ளன. இக்கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் வளர்ந்து உள்ளூர் மக்களே கூட உள்ளே செல்ல முடியாத அளவு புதர் மண்டி கிடக்கிறது.

  அனைத்து கல்வெட்டுகளும் தற்போதும் கோவில் சுவர்களில் காணக் கிடைக்கிறது.அவை பாதுகாப்பற்ற நிலையில் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. மதுரை ஜெயின் வரலாற்று மையம் சார்பில் அறிவிப்பு பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ள நிலையில்,வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி ஏதோ ஒரு குறுங்காடுபோல் அமைந்துள்ளது.

  சமண சமயத்திற்கும், தமிழ் மண்ணுக்கும் 2,500 ஆண்டுகளாக வரலாற்றியல் பண்பாடு சார்ந்த உறவும், தொடர்பும் நீடிப்பதால், அழிவின் பிடியில் உள்ள இந்த கோவிலை தமிழக அரசு மறுசீரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும் என்று ஆலத்தூர் கிராமத்தில் வாழும் பொதுமக்களும் , சமண சமூகத்தினரும் தொல்லியல் ஆர்வலர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

  இந்நிலையில் பழமை மாறாமல், இக்கோவிலை மீட்க, கோவையைச் சேர்ந்த அகிம்சை நடை குழுவினர், தமிழ் சமணர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். தொல்லியல் துறை அறிஞர் மணி, வரலாற்றுப் பேராசிரியர் மணி மற்றும் கோவையைச் சேர்ந்த சமணர்கள், தொல்லியல் ஆர்வலர்கள், ஆலத்துார் சென்று, கோவிலை பார்வையிட்டனர். கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, தொல்லியல் துறை அனுமதி பெற்று, விரைவில் கோவிலை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

  செய்தியாளர் : காயத்ரி வேலுசாமி, திருப்பூர்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Tirupur

  அடுத்த செய்தி