முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / வாடகை வீட்டில் ஆதரவற்று வசிக்கும் பெண்ணுக்கு ரூ.8 கோடிக்கு ஜிஎஸ்டி பில்... அதிர்ச்சியில் பெண் தற்கொலை முயற்சி

வாடகை வீட்டில் ஆதரவற்று வசிக்கும் பெண்ணுக்கு ரூ.8 கோடிக்கு ஜிஎஸ்டி பில்... அதிர்ச்சியில் பெண் தற்கொலை முயற்சி

பாதிக்கப்பட்ட பென் குல்ஜார்..

பாதிக்கப்பட்ட பென் குல்ஜார்..

கணவனை இழந்த அந்த பெண் தனது மாற்றுத்திறனாளி மகன் மற்றும் இதயநோயாளி மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupattur, India

ஜிஎஸ்டிக்கு 8 கோடி பில் கட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குல்ஜார் (வயது60). கணவனை இழந்த இவர் தனது  மாற்றுத்திறனாளி மகன் மற்றும் இதயநோயாளி மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குல்ஜார் வீட்டிற்கு கடந்த 19 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து இரு பெண் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் சொன்ன விஷயம் தான் குல்ஜாருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

இதையும் படிக்க :  9 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை.. சிவகாசியில் கொடூரம்!

அவர்கள், குல்ஜார் சான்றோர்குப்பம் பகுதியில் ஐ.எஸ். என்டர்பிரைஸ் என்னும் நிறுவனம் நடத்தி அதில் 8 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், உடனடியாக வரி பணத்தை கட்ட வேண்டும் எனவும், கட்ட தவறினால் தினமும் அபராதமாக 500 ரூபாய் கட்ட வேண்டும் என கடிதத்தை கொடுத்தனர்.

இதுகுறித்து எந்த விவரமும் புரியாமல் குல்ஜார் திகைத்துப்போனார். அந்த அதிர்ச்சியிலும், என்ன செய்வதென்று தெரியாமலும் குல்ஜார் தற்கொலைக்கு முயன்றார். இந்த செய்தியை கேள்விப்பட்டு, உடனடியாக குல்ஜாரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

பின் அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குல்ஜாரின் ஆவணங்களை வைத்து, சிலர் போலி நிறுவனம் நடத்தி வரிஏய்ப்பு செய்து குல்ஜார் மீது பழியை போட்டது தெரியவந்தது. இதனால் குற்றத்தை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் அந்த இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் புகார் அளித்தனர்.

மேலும் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி  சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இதே போன்று ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என பலருக்கு கடிதம் வந்துள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரையில் ஆம்பூர் வாணியம்பாடி பகுதியில் சுமார் ரூபாய் 75 கோடி மேல் சொந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு  வரிஏய்ப்பு கட்டவேண்டும் என  கடிதங்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : வெங்கடேசன் (ஆம்பூர்)

First published:

Tags: Crime News, GST, Sucide, Women