ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு தடை என சர்ச்சை எழுந்த நிலையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அதற்கு தடை இல்லை என உத்தரவிட்டுள்ளது.
ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில், மே 13, 14, 15 ஆகிய நாட்களில் ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருவிழாவில் 30திற்கும் மேற்பட்ட அரங்குகளும், 20ற்கும் மேற்பட்ட பிரியாணி வகைகளும் செய்யப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
ஆனால் இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆட்சியர் அமர் குஷ்வாஹா பீப் பிரியாணி தவிர மற்ற அனைத்து பிரியாணியும் கிடைக்கும் என்று கூறியது சர்ச்சையானது. இதுதொடர்பாக வெளியான செய்தி அறிக்கையிலும் மாட்டிறைச்சி ஏன் தவிர்க்கப்பட்டது என்ற காரணம் குறிப்பிடப்படவில்லை. இதை தொடர்ந்து மழை காரணமாக இந்த திருவிழா ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து விசிக பிரமுகர் ஓம்.பிரகாஷ், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய உணவாகிய மாட்டிறைச்சியை அரசு நடத்தும் விழாவில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதிகாரிகள் நிகழ்த்துகின்றனர். ஆட்டிறைச்சியோ, கோழி இறைச்சியோ சாப்பிடாமல், மாட்டிறைச்சி மட்டுமே உண்ணும் எங்களைப் போன்றவர்கள் அவ்விழாவில் பங்கேற்க முடியாத சூழலை அரசு அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். இது எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் வன்முறையாகவே நாங்கள் உணர்கிறோம். மாட்டிறைச்சி பிரியாணியை விழாவில் அனுமதித்து நீதி வழங்க வேண்டும் " என்று கூறியிருந்தார்.
அதனை அடுத்து, திருப்பத்தூர் ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சாதிரீதியாக மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்ற ஆட்சியரின் பதிலை, ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட ஆணையம், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாது என்பதையும், அப்படி தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழிவகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடைபெறும் மாவட்ட அரசு திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்ககூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.