Home /News /tirunelveli /

தமிழகத்தை இரண்டாகப் பிரித்து இரண்டிலும் முதல்வராவோம்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தை இரண்டாகப் பிரித்து இரண்டிலும் முதல்வராவோம்: நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். இரண்டிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று நெல்லையில் நடைபெற்ற தமிழக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

  தமிழ்நாட்டில் நாங்களும் முதல்வர்களாக வருவோம் என்று பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மற்றும் முக்கிய நகரங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜோதிபுரம் திடலில் மாவட்டத் தலைவர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனி நாடு கேட்கிறார். அவர் தனி ஆளாகத்தான் நின்று கேட்கிறார். அது அவருடைய ஆசை. எனக்கும் ஆசை இருக்கிறது. நயினார் நாகேந்திரனுக்கு ஆசை இல்லாமலா போய்விடும். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை கொடுப்பேன். 234 சட்டமன்ற தொகுதிகளை 117 என இரண்டாக பிரிக்க வேண்டும்.

  இரண்டு இடங்களிலும் நாங்கள் முதலமைச்சர்கள் ஆக வருவோம் என தனது முதலமைச்சர் ஆசையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் பாண்டியநாடு பல்லவ நாடு என இரு பெயர்களுடன் தமிழகத்தை பிரிக்க வேண்டும். இதனை செய்ய முடியாது என யாரும் நினைக்க முடியாது. செய்யக்கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். மோடி நினைத்தால் தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியும்.

  மாவட்டங்களை நிர்வாக வசதிகளுக்காக பிரிப்பது போல் மாநிலத்தை இரண்டாக பிரிப்பது வளர்ச்சி எளிதாக இருக்கும். ஆந்திர பிரதேசத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலம் இருப்பது போல் தமிழகத்தை பிரிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இரண்டு இன்ஜின் கொண்டு இழுத்தால் சிறப்பாக இருக்கும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் கூடுதல் திட்டங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பாக அது அமையும்.

  கேந்திர வித்யாலயா நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு கூடுதலாக வரவேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நவோதயா பள்ளிகள் வருவதை தடுத்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளனர். இதனால் மக்கள் முன்னேற்றம், கல்வி முன்னேற்றம் தடைபடுகிறது. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாணவ மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதி திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.

  Also see... திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்...

  தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போன்ற நிலை இருப்பது தேர்வுகள் எழுதுவதை தடை செய்வது போன்ற காரணங்களால் திறமை எவ்வாறு வளரும். தேர்வு வேண்டாம் என்பது சரியான அணுகுமுறை அல்ல.

  தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனது சட்டமன்ற தொகுதியான திருநெல்வேலி தொகுதியிலும் போதைப் பொருள்களின் உபயோகம் காரணமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கொலை கூட கஞ்சா போதையில் செய்யப்பட்டதாகவே தெரிகிறது.

  தமிழக அரசு போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது என்பது தவறு. அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக நடுநிலையோடு செயல்படுகிறது.

  அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி அதனை நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநில அரசு சுயநலமாகவே செயல்பட்டு வருகிறது என பேசிய நயினார் நாகேந்திரன் எம்ஜிஆர் பாடலையும் பாடி திமுக விற்கு எதிர்ப்பு தெரிவித்தார்

  " மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார்
  தங்கள் மக்கள் நலம் ஒன்றே கருத்தில் கொள்வார்"
  என்றார்

  ஆ. ராசா ஏன் தனிநாடு கோரிக்கை விடுத்தோம் என வருத்தப்படுவார் என பேசிய நிலையில் தான் முதலமைச்சராக வேண்டும் என்று தனது ஆசையையும் இந்த பேச்சு மூலம் வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Also see... தன்மானத்துடன் வாழ பாஜகவை விட்டு திமுகவிற்கு வாருங்கள்...

  செய்தியாளர்: சிவமணி, நெல்லை.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: ADMK, Nainar Nagendran, Nellai

  அடுத்த செய்தி