திருநெல்வேலி மாநகரின் புதிய ஆணையராக ராஜேந்திரன் கடந்த 15 தினங்களுக்கு முன் பொறுப்பேற்றார். பதவியேற்ற பிறகு அவர் போக்குவரத்து விதிமீறி செயல்படுபவர்களை எச்சரிக்கை விடுத்து வருகிறார். மேலும் போக்குவரத்து விதிமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
நெல்லையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அவ்வாறு போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை அபராதம் உள்ளிட்டவைகள் எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகரின் சமாதானபுரம், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை சந்திப்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read: தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
அதன்படி இருசக்கர வாகனத்தில் விதிமீறிய நம்பர் பிளேட், வாகனத்தின் வடிவமைப்பை மாற்றி அமைப்பது மற்றும் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது போன்ற போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் இல்லாதது, இன்சூரன்ஸ் இல்லாதது போன்றவைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அதோடு வாகனங்களில் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக வாகனங்களில் வரும் இருவரும் தலைக்கவசம் அணியாமல் வரும் நிலையில் அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுகிறது.
மேலும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விபத்துகளும் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Tirunelveli, Traffic Police, Traffic Rules