நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மேலாக இயக்கபடாமல் இருந்த காரின் உள்ளே சென்று விளையாடியபோது, கதவை திறக்க முடியாததால் மூச்சு திணறி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே லெப்பைக் குடியிருப்பை சார்ந்த நாகராஜன் ஜேசிபி ஆபரேட்டர். இவரது மகன் நித்திஷ்(7) மகள் நிதிஷா(5) மற்றும் அவரது உறவினர் சுதன் என்பவரது மகன் கபிலன் (4) ஆகியோர் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிகொண்டிருந்தனர். காரின் கதவைத்திறந்து உள்ளே சென்று காருக்குள் விளையாடி கொண்டிருந்தபோது, அவர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
3 நாட்களாக கார் அங்கேயே நிற்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதிக உஷ்ணம் காருக்குள் இருந்துள்ளதோடு ஆக்சிஜன் குறைவாக இருந்துள்ளது. இதனால் குழந்தைகள் தோலில் காயம் ஏற்பட்டு உள்ளது . உஷ்ணம் தாங்காமல் காரை விட்டு வெளியே வர நினைத்து குழந்தைகள் கதவை திறக்க முயன்றபோது முடியாத நிலையில் வாந்தி எடுத்து, மூச்சுத்திணறி மயங்கியுள்ளனர்.
30 நிமிடங்களாக அவர்கள் காரை விட்டு வெளியே வர போராடியுள்ளனர். குழந்தைகளின் கைரேகை கார் கண்ணாடியில் பதிவாகியுள்ளது. வெகு நேரமாக குழந்தைகளை காணாமல் தேடிய பெற்றோர் குழந்தைகள் காருக்குள் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அவர்களை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகள்
இந்த சம்பவம் தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காருக்கு சிக்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பணகுடி மருத்துவமனைக்கு வந்த சட்டப் பேரவை தலைவர் அப்பாவு குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க:
திருமணத்திற்கு முன்பே மரணித்த காதலன்.. அவர் நினைவுகளோடு மருமகளான காதலி!
குழந்தைகள் காருக்கு சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் என்பவர் கூறுகையில்,
’ கார் அருகே விளையாடிய குழந்தைகளிடம் வெயில் அதிகமாக உள்ளது. வீட்டிற்குள் செல்லுங்கள் என கூறி விட்டு மாடு மேய்த்த சென்று விட்டேன். 5.30 மணிக்கு திரும்ப வரும் போது குழந்தைகளை பெற்றோர் தேடினர். கார் அருகே சென்று பார்த்த போது காருக்குள் மயக்க நிலையில் குழந்தைகள் கிடந்தனர் ’ என்றார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.