ஹோம் /நியூஸ் /Tirunelveli /

சொத்தை பறித்துக் கொண்டு பெற்றோரை அடித்து துன்புறுத்தி தவிக்க  விட்ட மகன் - நியாயம் கேட்டு ஆட்சியரிடம் முறையிட்ட பெற்றோர்

சொத்தை பறித்துக் கொண்டு பெற்றோரை அடித்து துன்புறுத்தி தவிக்க  விட்ட மகன் - நியாயம் கேட்டு ஆட்சியரிடம் முறையிட்ட பெற்றோர்

வயதான தம்பதி

வயதான தம்பதி

Tirunelveli : தங்களை ஏமாற்றி சொத்துக்கள் முழுவதையும் எழுதி வாங்கிக் கொண்டு, நடுத்தெருவில் நிறுத்திய தங்களது மகனிடமிருந்து மீண்டும் சொத்துக்களை மீட்டு தரக்கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் முதிய தம்பதி புகார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இறுதிக் காலத்தில் தன்னை நன்கு கவனித்துக் கொள்வதாக கூறி தனது சொத்துக்கள் முழுவதையும் எழுதி வாங்கிய தங்களது மகன்,  தற்போது தங்களை அடித்து துன்புறுத்தி, நிர்க்கதியாய் விட்டுவிட்டதாக வயதான கணவனும் மனைவியும் தங்கள் சொத்தை மீட்டுத் தரக்கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

  திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வல்கடம்பு கிராமத்தை சேர்ந்த ஆசீர்வாதம் இந்திரர்- அன்னபூரணம் தம்பதியினர்.  முதியவர்கள்  இருவருக்கும் 84 வயதாகும் நிலையில் அப்பகுதியில் தனக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தில் பணிகளை பார்த்து கொண்டு தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளார்.

  இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.  மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்ட நிலையில், மகன் ஆறாம் சின்னப்பர் இந்திரர்  ராதாபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.  இந்த நிலையில் வயதான தாய்-தகப்பன்  இறுதிவரை இருவரையும் பார்த்துக் கொள்வதாகக் கூறி சொத்துக்கள் அனைத்தையும் ஆறாம் சின்னப்பர் இந்திரர் எழுதி வாங்கியுள்ளார்.

  குறிப்பாக 7 ஏக்கர் மதிப்புள்ள விவசாய நிலங்கள் சொந்த வீடு என மொத்தமாக 50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் மகனுக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் நாட்கள் கடந்த நிலையில் தாய்-தந்தை இருவருக்கும்  உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், வீட்டை விட்டு விரட்டியதாகவும்  தெரிகிறது வயதான தம்பதியினர் வேறு வழியின்றி  தற்போது தங்களின் மகள்களின் ஆதரவில் தான் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

  தங்களை ஏமாற்றி சொத்துக்கள் முழுவதையும் எழுதி வாங்கிக் கொண்டு, நடுத்தெருவில் நிறுத்திய தங்களது மகனிடமிருந்து மீண்டும் சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை தொடர்பாக ஏற்கனவே சேரன்மகாதேவி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் மாதம் 2000 வழங்க வேண்டும் என்று தங்களது மகனுக்கு உத்தரவிட்டார்.

  ஆனால், சொத்துக்கள் மீட்டுத் தருவது குறித்து அதில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், தங்களது சொத்துக்களை மீட்டு தங்களிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினரான ஆசீர்வாதம் இந்திரர் மற்றும் அன்னபூரணம் ஆகியோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

  இதனிடையே மகன் ஆறாம் சின்னப்பர் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் 7 ஏக்கர் நிலத்தை தனது மனைவி சித்ரா பெயருக்கு கிரய ஆவணம் செய்துள்ளார். 20 லட்ச ரூபாய்க்கு மனைவி சித்ரா நிலத்தை வாங்கியதாக ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பொதுவாக  இரத்த உறவுகளில் உள்ளவர்கள் சொத்துக்களை வாங்கும் போது செட்டில் மண்ட் பத்திரமே பதிவு செய்வார்கள் அதற்கு பதிவு கட்டணம் பத்திர செலவு குறைவு. ஆனால் ஆறாம் சின்னப்பர் சொத்து கைவிட்டு போய் விடக் கூடாது என்பதற்காக முழு வழிகாட்டி மதிப்பீட்டிற்கும் பத்திரம் பதிவு செய்துள்ளார்.

  Must Read : போலீஸ் அதிகாரி எனக்கூறி பண மோசடி... போலியாக சைரன் காருடன் உலாவந்த மோசடி பேர்வழி - சென்னையில் கைது

  இந்நிலையில், ஆட்சியர் சரியான விசாரணை மேற்கொண்டு முதியவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  செய்தியாளர் - ஐயப்பன், திருநெல்வேலி.

  Published by:Suresh V
  First published:

  Tags: Parents, Property, Thirunelveli