முகப்பு /செய்தி /திருநெல்வேலி / இடைத்தேர்தல் தோல்வி... இபிஎஸ் பதவி விலகக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!

இடைத்தேர்தல் தோல்வி... இபிஎஸ் பதவி விலகக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போஸ்டர்

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போஸ்டர்

திசையன்விளையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Nanguneri, India

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி இல்லை என்ற நிலை கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓ .பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பணியாற்றி வந்தனர். கட்சி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நடைபெற்று வந்தது.

எனினும் கட்சியிலும் ஆட்சியிலும் பழனிசாமியின் கை ஓங்கத் துவங்கியது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரதிநிதிகள் பழனிசாமியின் தலைமையே பின் தொடர்ந்து வந்தனர் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, அதற்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி, ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற தேர்தல் என அனைத்து தேர்தலிலும் தோல்விகளை சந்தித்து வந்தது. ஒற்றை தலைமை இல்லாததை தொடர் தோல்விகளுக்கு காரணம் என பழனிசாமி தரப்பினர் முடிவு செய்து கட்சியின் பொதுக்குழுவை கூட்டினர்.

அதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றம் சென்ற நிலையில் பொதுக்குழு கூட்டியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை பன்னீர்செல்வம் அணுகியுள்ளார். இதனிடைய  சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் தோல்வியை தழுவினார்.

இதையும் படிக்க :  ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு... இபிஎஸ் பதிலளிக்க சிவில் நீதிமன்றம் உத்தரவு..!

இதனையொட்டி, திசையன்விளையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி அமைப்பாளராக இருப்பவர் டென்சிங் சுவாமிதாஸ். இவர் திசையன்விளை, இட்டமொழி சுற்றுவட்டார பகுதிகளில் "எட்டு தோல்வி எடப்பாடி"  என்ற தலைப்பில்  அதிமுக  தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதை விமர்சித்து போஸ்டரை ஒட்டியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் (22 தொகுதிகளில் 9யில் அதிமுக தோல்வியை தழுவியது), 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 ஆம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தல், 2021 இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 8 தோல்விகளை கண்ட எடப்பாடி பழனிசாமி எனவும் உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை  ராஜினாமா செய்யவும் என டென்சிங் ஸ்வாமிதாஸ் சுவரொட்டி அடித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை விட்டு நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்க வேண்டுமென சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பிரமுகர் எடப்பாடியை பதவி விலக கூறியுள்ளார்.

திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை இரண்டாம் கட்ட தலைவர்களில் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே ஓபிஎஸ் அணியில் உள்ளனர். எனினும் ஓபிஎஸ் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அந்த வகையில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டென்சிங் அடித்துள்ள போஸ்டர், அதில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி படம் ஆகியவை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Pannerselvam