முகப்பு /செய்தி /Tirunelveli / 40% உயர்ந்த கட்டுமான பொருட்களின் விலை.. கட்டிடங்கள் கட்டுவோர் கடும் பாதிப்பு

40% உயர்ந்த கட்டுமான பொருட்களின் விலை.. கட்டிடங்கள் கட்டுவோர் கடும் பாதிப்பு

கட்டுமான பொருட்கள்

கட்டுமான பொருட்கள்

4 யூனிட் கொண்ட ஒரு லாரி எம்.சாண்ட் திருநெல்வேலியில் உள்ள குவாரியில் வாங்கும்போது 11,500 என இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வருவதற்கு 17 ஆயிரத்து ஐநூறு  ரூபாய் ஆகிறது. 

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகள் இயங்காததால் கட்டுமான பொருட்களை அண்டை மாவட்டங்களில் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், புதிதாக வீடு கட்டுவோர் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 55 கல்குவாரிகள்,  25க்கும் மேற்பட்ட கிரசர்களும் செயல்பட்டு வருகிறது இவற்றிலிருந்து நாள்தோறும்  500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 6000 முதல் 8000 டன் அளவிற்கு குண்டுக்கல், ஜல்லி,  எம் சாண்ட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.  கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இங்கிருந்து ஏராளமான கனிமங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது .

இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி அடைப்பான் குளம் பகுதியில் உள்ள குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறை இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள குவாரிகள் அனைத்திலும் ஆய்வு செய்யப் போவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து குவாரிகள் மற்றும் கிரசர்களில் விற்பனை நிறுத்தப்பட்டது . கனிம வள துறையின் உதவி இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனிடையே  கனிமங்களை கொண்டு செல்வதற்கான நடை சீட்டு கொடுப்பது நிறுத்தப்பட்டது. 20 நாட்களை கடந்த நிலையிலும் இதே நிலை நீடிக்கிறது.  அதிகாரிகளை கொண்டு குவாரிகளில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருக்கிறதா அல்லது அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கிறதா,  அனுமதிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு முடிந்த நிலையிலும் நடை சீட்டு வழங்கப்படவில்லை.

இதையும் படிக்க: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: அமைச்சர் சேகர் பாபு

இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேறுவழியின்றி அண்டை மாவட்டகளிலிருந்து கனிமங்களை வாங்கும் சூழ்நிலைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்க  கூடிய கட்டுமான தொழிலில் இருப்பவர்கள்,  புதிய வீடுகள் கட்டுபவர்கள் தள்ளப்பட்டனர். நாள்தோறும் 6,000 முதல் 8,000 டன் வரை கனிமங்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேவைப்படும் சூழலை அறிந்த அண்டை மாவட்டங்களில் உள்ள குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் விலையை 30% உயர்த்தினர்.

தேவை அதிகமாக உள்ள எம் சாண்ட் விலை டன் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தியை விட தேவை அதிகமாக இருப்பதாலும் கிரசர்களில் லாரிகள்  நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 சதவீத அளவில் கனிமங்களின் விலை உயர்ந்து இருக்கும் நிலையில் அதனை கொண்டுவர பயன்படுத்தும் லாரிகளின் வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  அதிக தூரத்தில் இருந்து கனிமங்கள் கொண்டு வரப் படுவதால் வாடகை உயர்த்தப்படுவதாக கூறும் நிலையில் 3 யூனிட் எம் சாண்ட்  வாங்கும் போது 4000 முதல் 5000 வரை கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.. திருபுவனம் பட்டு புடவை..!- புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் இரண்டு நாள் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது!

கட்டுமானத்தில் அதிக அளவு செலவாகும் மிக முக்கிய பொருளாக இருக்கும் மணல் திருநெல்வேலி மாவட்டத்தில் அள்ள  தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் எம்சாண்ட் இன் பயன்பாடு கட்டுமானத்தில் முழுமையாக இருப்பதால் அதன் விலை உயர்வு வீடு கட்டுவோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.  கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குவாரிகள் கிரசர்கள் மீது ஏற்கனவே ஆய்வு நடத்தப்பட்டு உள்ள நிலையில் விதி மீறல்களை விரைவில் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதோடு விதிமுறைக்கு உட்பட்டு கனிம வளங்கள் எளிதில்  கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்  என்று கோரிக்கை எழுந்துள்ளது.

4 யூனிட் கொண்ட ஒரு லாரி எம்.சாண்ட் திருநெல்வேலியில் உள்ள குவாரியில் வாங்கும்போது 11,500 என இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வருவதற்கு 17 ஆயிரத்து ஐநூறு  ரூபாய் ஆகிறது.  20 நாட்களுக்கு மேலாக இது போன்ற சூழல் நீடிக்கும் நிலையில் மீண்டும் எப்போது மாவட்டத்தில் குவாரிகள் கிரசர்கள் செயல்படும் என்பது குறித்த சரியான தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில் அரசு தலையிட்டு மாவட்டத்தில் தனிமங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை தொடர்பு கொண்டு இது குறித்து  கேட்டபோது,  விதி மீறல் குறித்த ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் வெளிமாவட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டு உள்ளனர். என்னென்ன விதிமீறல்கள் உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில தினங்களில் இதற்கான பணி முடிவடையும். குவாரிகள்,  கிரசர்கள் திறப்பது குறித்து கனிமவளத்துறை தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Buildings, Home construction