தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நெற்கட்டும் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டவர் பாளையக்காரர் பூலித்தேவன். இந்திய சுதந்திரப் போரின் முன்னோடியாக வர்ணிக்கப்படுபவர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்டு 12 வயதிலேயே 1726-ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினர் பெற்றோர். சகோதரியின் மகள் லட்சுமி நாச்சியாரை மணர்ந்து மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார். பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தியது போக சங்கரன்கோயில் பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குத் திருப்பணி செய்தவர்.
1750-ல் திருச்சிக்கு மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ் தென்னாட்டுப் பாளையக்காரர்கள் வந்து தன்னை சந்திக்க வேண்டுமென அறிவித்தபோது வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றதாக கூறப்படுகிறது. 1755-ல் கோட்டையை முற்றுகையிட்டு கர்னல் கீரோன் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன் நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை வெள்ளையருக்கு கிடையாது என வீர முழக்கமிட்டு விரட்டியடித்தார்.
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆற்காட்டு நவாபின் சகோதரரும் ஆங்கிலேயருக்கு இணக்கமானவருமான மாபூஸ்கானை தோற்கடித்தார். 1756 மார்ச் மாதம் திருநெல்வேலியில் மாபூஸ்கானுடன் புலித்தேவன் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் கொன்றதால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார்.
1760ஆம் ஆண்டு நெற்கட்டும் செவல் கோட்டையை யூசுப்கான் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு வாசுதேவ நல்லூர்க் கோட்டையை கேப்டன் பௌட்சன் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்த கான்சாகிபால் பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் 10 ஆண்டுகள் போரிட்ட பின்னரே 1766-ல் வெல்ல முடிந்தது. அதன் பின் தலைமறைவானார்.
Also see... பல்லாவரத்தில் குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் மரணம்
1767-ல் மறைந்த பூலித்தேவனின் இறப்பு பற்றி வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார் என்றும் அவரது மறைவை ஆங்கிலேயர்கள் மறைத்துவிட்டனர் என்றும் கூறுவர். அவரின் நினைவாக அவர் வாழ்ந்த நெற்கட்டும் செவல் இல்லம் தமிழ்நாட்டு அரசால் புதுப்பிக்கப்பட்டு நினைவு மாளிகையும் முழு அளவு உருவுச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோரு ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு தபால்தலை வெளியிட வேண்டும் என நெற்கட்டும் செவல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: செந்தில், தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puli thevar, Tenkasi