தூத்துக்குடி விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்பு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காட்டினர். அபோது ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பை சேர்ந்த பெண்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தி விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லும்படி எச்சரித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயங்குறிச்சியில் நடைபெறும் மிலாது நபி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தூத்துக்குடி வந்தார். அவரை வரவேற்க மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானவர்கள் தூத்துக்குடி விமான நிலையம் வந்திருந்தனர்.
அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவகுறிச்சியை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர் முத்துமாரி தலைமையில் சுமார் 40 பெண்கள் இரண்டு வேன்களில் தூத்துக்குடி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
விமானம் தரையிறங்கி திருமாவளவன் வெளியே வரக்கூடிய நேரத்தில் இந்த பெண்கள் தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த ஸ்டெர்லைட் "ஆலையை திறக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகை உயர்த்திப் பிடித்தபடி திருமாவளவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த பெண்களிடம் இருந்த பதாகைகளை பிடுங்கி கிழித்து வீசி எறிந்தனர்.
Also see... கடந்த தேர்தலில் அதிமுகவிடம் 40 இடங்கள் கேட்டேன்- டிடிவி ஓபன் டாக்!
மேலும் அந்த பெண்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே கிளம்பும்படி எச்சரித்தனர். இதையடுத்து அந்த பெண்கள் தாங்கள் வந்திருந்த வேனில் ஏறி விமான நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sterlite plant, Thoothukodi, VCK