தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவியின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் புதிய பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்துள்ளார். இதனால், ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி மாணவி குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சித்தன் நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி. இவரது மனைவி நல்லமாடி. இருவரும் கூலி தொழிலாளர்கள். இந்த தம்பதியின் மகள் தங்கமாரியம்மாள். மாற்றுத்திறனாளியான இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
பெருமாள்சாமி வசித்து வரும் வீட்டிற்கு பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். அதிலும் மாற்றுதிறனாளியான தனது மகளை வைத்து கொண்டு சிரமப்பட்டு வந்தனர். வீட்டிற்கு செல்வதற்கு சரியான பாதை இல்லாமல் குண்டும், குழியுமாகவும், பள்ளமாக இருந்த காரணத்தினால் தங்களது மாற்றுத்திறனாளி மகளை சக்கர நாற்காலி வண்டியில் கொண்டு செல்லமுடியாத சூழ்நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
மேலும், அருகில் உள்ள மெயின்சாலையும் சேதமடைந்து காணப்பட்டதால் பெருமாள்சாமி தம்பதியினர் தங்களது மகள் தங்கமாரியம்மாளை அரைகிலோ மீட்டர் வரை தூக்கி கொண்டு அதன்பின்னர் ஆட்டோவை வரவைத்து தான் வெளியில் அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. பல ஆண்டுகளாக பலரிடம் கோரிக்கை வைத்தும் இந்த நிலை மாறாமல் அப்படியே இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தங்கமாரியம்மாள், தங்களது தெருவில் உள்ள சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சாலையை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது மட்டுமின்றி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
இதை அடுத்து ஊராட்சி நிதியில் இருந்து ரூ 2லட்சம் மதிப்பில் மெயின் சாலையில் இருந்து பெருமாள்சாமி வீடு வரைக்கும் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சரியான சாலை வசதி இல்லமால் அவதிப்பட்டு வந்த தங்கமாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது கோரிக்கை மனுவினை ஏற்று கனிவுடன் பரீசிலனை செய்து நடவடிக்கை எடுத்து பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு தங்கமாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினை தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து மாணவி தங்கமாரியம்மாள் கூறுகையில், சரியான சாலை இல்லமால் தானும், தனது பெற்றோரும் மிகவும் சிரமடைந்து வந்ததாகவும், தங்களது பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததும் ஒரு மாதத்திற்குள் புதிய பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்பொழுது சக்கர நாற்காலி வண்டியில் அமர்ந்து சாலையில் பயணிக்க முடிவதாகவும் தெரிவித்தார். சாலை அமைத்துக் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், மேலும் சக்கர நாற்காலி வண்டி பழுதடைந்து விட்டதால், தனக்கு அரசு 3 சக்கர பைக் வழங்கினால் மிகவும் நன்றாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தங்கமாரியம்மாள் தந்தை பெருமாள்சாமி கூறுகையில், கூலி வேலை செய்து தனது மகளை படிக்க வைத்து வருவதாகவும், சரியான சாலை வசதி இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தது மட்டுமின்றி, மகளை சாலை வரை தூக்கி சென்று தான் விட்டு வரவேண்டிய நிலை இருந்ததாகவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுத்து புதிய பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுள்ளது மிகழ்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியருக்கும், அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாக கண்ணீர்மல்க தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லமால் குண்டு, குழியுமான சாலையில் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையினால் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறானளி குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் மாவட்ட ஆட்சியரை பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Physically challenged, Thoothukodi, Tuticorin collector