முகப்பு /செய்தி /Thoothukudi / மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரம்.. மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகன்

மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரம்.. மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகன்

மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகன்

மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகன்

Thoothukudi : கோவில்பட்டி அருகே மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாகைத்தாவூர் கிராமத்தில் தனது மனைவி குடும்ப நடத்த வரவில்லை என்பதற்காக சந்தனக்குமார் என்பவர் தனது மாமனார் மந்திரம் என்பவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தனக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே சிவஞானபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வாகைத்தாவூர். இந்த ஊர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் மந்திரம் (65). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியின் மகள் ஜெயாவுக்கும், அதே பகுதி தெற்குத் தெருவைச் சேர்ந்த தர்மர் மகன் சந்தனகுமாருக்கும்(36) கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் நடந்துள்ளது.

சந்தனக்குமார், ஜெயா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தொடக்கத்தில் விவசாய கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்த சந்தனக்குமார், மதுவிற்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவி ஜெயா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் ஜெயா தனது குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதற்கிடையில், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சந்தனக்குமார் பல முறை அழைத்தும் ஜெயா மறுத்து விட்டார். மேலும் மந்திரம், சந்தனக்குமாரை திட்டி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலையில் பால் பண்ணையில் பாலை ஊற்றிய பின்னர் மந்திரம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரது மருகன் சந்தனக்குமார் வழிமறித்து, தனது மனைவி ஜெயாவை குடும்ப நடத்த அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். தினமும் குடித்து விட்டு தனது மகளை சித்தரவதை செய்தால் எப்படி வாழ முடியும், எதுவாக இருந்தாலும் தனது மகள் முடிவுதான் தன்னுடைய முடிவு என்று மந்திரம் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சந்தனக்குமார் தனது மாமனார் மந்திரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் முற்றவே சந்தனக்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் மந்திரத்தை வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்தில் மந்திரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தகவல் கிடைத்தும் கயத்தார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மந்திரம் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்தனக்குமாரை தேடி வந்தனர்.

Must Read : ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்.. கடைகளை திறக்க அரசு மாற்று ஏற்பாடு

இந்நிலையில்,  கயத்தார் போலீசார் சந்தனக்குமாரை கைது செய்தனர். மனைவி குடும்பம் நடத்த வரவில்லை என்ற ஆத்திரத்தில் மருமகன், மாமனாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kovilpatti, Murder, Thoothukudi