முகப்பு /செய்தி /Thoothukudi / ஆட்டோ கவிழ்ந்து முதல் நாள் பள்ளிக்கு சென்ற எல்கேஜி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு... தூத்துக்குடி அருகே சோக சம்பவம்

ஆட்டோ கவிழ்ந்து முதல் நாள் பள்ளிக்கு சென்ற எல்கேஜி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு... தூத்துக்குடி அருகே சோக சம்பவம்

ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ

ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ

முதல் நாள் பள்ளிக்குச்சென்ற மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு தினம் தோறும் பள்ளி மாணவ மாணவிகளை ஆடட்டோ மூலம் அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார்.

அப்போது அனவரதநல்லூர் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநர் போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் திடிரென்று ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மாணவன் செல்வநவீன் கடந்த வாரம் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு இன்று தான் முதல் நாளாக பள்ளிக்கு சென்றான்.

மேலும் இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். இதில் சில மாணவ மாணவிகள் இன்று தான் பள்ளிக்கு முதல் நாள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read... விருத்தாசலம் அருகே இளம் பெண்ணை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்

உடனே இதுகுறித்து முறப்பநாடு போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் இறந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல்துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதில் அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவித்தல், மனித உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக சவாரி செய்தல், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகள் சேர்த்து ஆட்டோ ஓட்டுனர் ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர்: முரளிகணேஷ், தூத்துக்குடி

First published:

Tags: LKG, Road accident, Student