Home /News /thoothukudi /

வீடுதேடி வரும் கோவில்பட்டி கடலை மிட்டாய்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

வீடுதேடி வரும் கோவில்பட்டி கடலை மிட்டாய்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

கோவில்பட்டி கடலைமிட்டாய்

கோவில்பட்டி கடலைமிட்டாய்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பொது மக்கள் வீட்டில் இருந்தபடியே கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சல் துறை மூலமாக முன்பு பதிவு செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலங்கள் மூலமாக விற்பனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பொது மக்கள் வீட்டில் இருந்தபடியே கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சல் துறை மூலமாக முன்பு பதிவு செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தபால் துறையின் இந்த நடவடிக்கையினால் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரிசல் மண் பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு தனி மவுசு உண்டு. இயற்கையில் இனிப்பு சுவை கொண்ட இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உண்டு

கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலை, மண்ணின் தன்மையுடன் தாமிரபரணி தண்ணீர், பனைவெல்லம் ஆகியவற்றுடன் தயாரிக்கும் கோவில்பட்டி கடலை மிட்டாய் சுவையாக இருப்பது மட்டுமின்றி மருத்துவக் குணம் கொண்டவையாகவும்  சத்துணவு தின்பண்டமாகவும் விளங்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடலை மிட்டாய் உற்பத்தி செய்து வருகின்றன. இதனை நம்பி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மட்டுமின்றி, பல உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020ம் ஆண்டு மத்தியஅரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இது கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுக்கு புது உத்வேகத்தினை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கடலை மிட்டாய் தொழில் வளர்ச்சிக்கும் உதவி உள்ளது. அதுமட்டுமல்லாது தபால் துறை மூலமாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடலை மிட்டாயை சர்வதேச தரத்திற்கு பேக்ஜிக் செய்வது தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க: 40% உயர்ந்த கட்டுமான பொருட்களின் விலை.. கட்டிடங்கள் கட்டுவோர் கடும் பாதிப்பு


 

மத்திய, மாநில அரசுகளில் தொடர் ஊக்கத்தினை தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலகளவில் கொண்டு செல்ல இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனையும் அஞ்சல் துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்டது.

அதாவது கோவில்பட்டி கடலை மிட்டாயை இனி அஞ்சலகம் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே தபால்காரர் மூலம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 கொடுத்து கடலை மிட்டாய்க்கான ஆர்டர் செய்தால் அது கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையம் மூலம் பெறப்பட்டு அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கே விரைவு அஞ்சல் மூலம்  கடலை மிட்டாய் கொண்டு சேர்க்கப்படும். விரைவு அஞ்சலுக்கென தனி கட்டணம் கிடையாது.

மேலும் படிக்க: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.. திருபுவனம் பட்டு புடவை..!- புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் இரண்டு நாள் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது!


ரூ.390 செலுத்தி விரைவு தபால் மூலம் பெறப்படும் பார்சலில் மொத்தம் ஒரு கிலோ எடை கொண்ட 5 கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் இருக்கும். மேலும் வீட்டில் இருந்தபடியே தபால்காரர் மூலமாகவும் ரூ.390 செலுத்தி கடலை மிட்டாயை ஆர்டர் செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விற்பனை  ஜூன் 1ம் தேதி  முதல் அஞ்சலகங்களில் தொடங்கியுள்ளது. கோவில்பட்டி கடலைமிட்டாய் இனி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைவரின் இல்லங்களுக்கும் நேரிடையாக சென்றடையவது மட்டுமின்றி,  கடலை மிட்டாய்உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

கோவில்பட்டி கடலைமிட்டாய்


தபால் சேவை மட்டும் செய்து கொண்டு இருந்த அஞ்சல் துறை தற்பொழுது தங்களை போன்ற வியாபாரிகளுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது. மக்களுக்கு நேரிடையாக பொருள்களை கொண்டு செல்லும் வாய்ப்பாக உள்ளது. கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் தொழிலை வளர்க்க சிறந்த வாய்ப்பாக உள்ளது. உலகத்திலே அதிக நெட்வொர்க் கொண்டது இந்திய அஞ்சல் துறை. மற்ற தனியார் ஆன்லைன் நிறுவனங்களை விட அதிக நெட்வொர்க் கொண்டது அஞ்சல் துறை தான். அதனை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டோம், தற்பொழுது அந்த வாய்ப்பு உருவாகி உள்ளதாக கூறுகிறார் கடலை மிட்டாய் விற்பனை செய்ய தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆசியாபார்ம்ஸ் பாபு

கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கண்ணன் கூறுகையில், ‘ தபால் துறை மூலமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை மேலும் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்வது மட்டுமின்றி, போலி கடலை மிட்டாய் தடுக்கப்படும், தனியார் ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்வது போல தபால் துறையும் விளம்பரம் செய்ய வேண்டும், மேலும் கடலை விற்பனையாளர்களுக்கான ஆண்டு கட்டணம் அதிகமாக இருப்பதை குறைக்க வேண்டும், அவ்வாறு செய்தால் சிறு கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களும் வளம் பெறுவார்கள்’ என்றார்.

இதை படிக்க: ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணியில் சிறப்பாக விளையாடி திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு


கோவிலட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் கூறுகையில், சென்னைக்கு உள்ள உறவினர்களுக்கு கொரியர் மூலமாக கடலை மிட்டாய் அனுப்பி வைத்து வந்தேன், இதற்கு என்று தனியாக நேரம் செலவழிக்க வேண்டியது இருந்தது. தற்பொழுது தபால்துறை மூலமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை செய்யபடுவதாக தகவல் வந்தததை தொடர்ந்து இன்று தபால் துறை மூலமாக அனுப்பி வைத்துள்ளதாகவும், இது எளிதாக இருப்பதாகவும் தெரித்தார்.

புவிசார்குறியீடு, சிறப்பு அஞ்சல் உறை என்று கோவில்பட்டி கடலை மிட்டாய்யின் வளர்ச்சி அடுத்த கட்டத்தினை நோக்கி செல்லும் வகையில், இந்திய அஞ்சல் துறை மூலமாக வீடுகளுக்கே கோவில்பட்டி கடலை மிட்டாய் சென்றடைவது கோவில்பட்டி நகருக்கும், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மற்றொரு மணி மகுடமாக ஜொலிக்க தொடங்கியுள்ளது.

 
Published by:Murugesh M
First published:

Tags: India post, Kovilpatti

அடுத்த செய்தி