அரசியல் கட்சிகள் பிரதமரிடம் கேள்விகளை முன் வைக்கும் போது அவர் நமக்கு தரும் ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவதோடு எந்த கேள்விக்கும் பதில் இல்லை என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு பேசினார். அப்போது, இன்று பாராளுமன்றம் என்பது கேள்விகள் கேட்க கூடாத பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்கக்கூடிய ஒரு இடமாக மாறிக் கொண்டிருக்கிறது.
நாங்கள் அவர்களிடம் முன்வைக்கக்கூடிய கேள்விகளை கேட்கக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும் ஆனால் கேள்வி நேரம் கூட அப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்க முடியாத ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு அமைச்சரிடம் நீங்கள் மதுரை எய்ம்ஸ் பற்றி கேள்வி கேட்டால் நம்மை அச்சுறுத்துகிறார். கயிறு கழுத்தை நெரிக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய அமைச்சர் பதில் சொல்கிறார் என்றால் இந்த நாட்டின் ஜனநாயகத்தின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் இயக்கமும் கட்சியும் அங்கே இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளும் கேள்விகளை அவர் முன்னால் வைக்கும் பொழுது அவர் நமக்கு தரக்கூடிய ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது. எந்த கேள்விக்கும் பதில் இல்லை நீ கேள்வி கேட்டதே தவறு என்று கேள்வி கேட்டவர்களை எல்லாம் குறைத்து பேசுவது நையாண்டி செய்வது என்று அவர்களை மிரட்டுவது அச்சுறுத்துவது என்பதுதான் இன்று வழக்கமாக நாடாளுமன்றத்திலே மாநிலங்களவையிலே வழக்கமாக மாறிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சூழலை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Also Read: 28 பிளாஸ்டிக் பாட்டில்கள்.. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரதமரின் கோட்.. விலை இவ்வளவுதானா?
நாம் எல்லாம் புரட்சிகள் எல்லாம் செய்து முடிக்கப்பட்டு விட்டது. ஜாதி என்பது இன்று ஏறத்தாழ கடந்துவிட்ட ஒன்று பெண் அடிமை என்பது இன்று ஏறத்தாழ கடந்துவிட்ட இன்னும் போக வேண்டிய தூரம் இருந்தாலும் அந்த பயணத்தை தொடங்கி விட்டோம். இப்போது ஒரு கணிசமான தூரத்தை அடைந்து விட்டோம் என்று நினைக்கக்கூடிய இந்த நேரத்திலே ஜனநாயகம் இந்த நாட்டிலே தலை துவங்கும் என்று நம்பிக்கை நமக்குள் விதைக்கப்பட்ட அந்த நேரத்திலே இன்று அத்தனையையும் அடியோடு வேரறுக்கக்கூடிய பேச்சுக்களை கேட்க கூடிய அரங்கமாக இன்று நாடாளுமன்ற மாறிக்கொண்டிருக்கிறது . இதையெல்லாம் கேள்வி கேட்கக்கூடிய ஒன்றாக எழுத்தும் கலையும் தான் இந்த கேள்விகளின் விதைகளாக இருக்க முடியும் அதை இன்று நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த நிகழ்வுகளை இந்த கேள்விகளை நாம் ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடம் கேட்க வைக்க வேண்டும் அது ஒன்றுதான் மாற்றத்தை உருவாக்கும் என்றார்.
செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Kanimozhi, Local News, Tamil News, Thoothukudi