ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நியாயமானது என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் முருகேசன் நகர், பிரையண்ட் நகர், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பல மணி நேரம் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்'
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்பி , “தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மழையின்போதும் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்து பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மழை நீர் தேங்குவதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
இதனைத்தொடர்ந்து, “மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி மூலமாக பல்வேறு பகுதிகளில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மழை பெய்தால் இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினர்.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தான கேள்விக்கு அவர் கூறுகையில், “ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்துவிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இன்னும் சரியாக விசாரித்து விட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: EPS, Kanimozhi, Thoothukudi, Thoothukudi Sterlite