நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு சரிவர தருவதில்லை என்பதால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தாமத படுவதாக கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கரடிகுளம் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 30,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தமிழக சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்த பின்னர் கனிமொழி எம்பி பேசுகையில், எத்தனையோ விஷயங்களை பொருட்களை குழந்தைகளுக்காக நாம் சேர்த்து வைக்கிறோம், உண்மையில் அவர்களின் எதிர்காலத்திற்கு தரக்கூடிய மிகப்பெரிய ஒரு பரிசு என்றால் நாம் நடக்கூடிய ஒவ்வொரு மரம் தான். உங்களுடைய பிள்ளைகள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு தரக் கூடிய மிகப்பெரிய பரிசு, நாம் நடக்கூடிய மரங்கள் நம்மையும் இந்த மண்ணையும் பாதுகாக்கும், பெரிய அரணாக கேடயமாக மரங்கள் இருக்கும், அடுத்த தலைமுறைக்கும் , மழை வருவதற்கும் , பயிர்களை பாதுகாப்பதற்கும், மண்ணை பாதுகாப்பதற்கும் மரங்களை நடுவது நாம் செய்ய வேண்டிய கடமை என்ற உணர்வோடு நாம் செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியை கொடுக்கவில்லை, சரியாக வராத சூழ்நிலை உள்ளது. ஆகையால் உறுதியாக கூற முடியாது. அடுத்து வரக்கூடிய நிதியை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Also Read: தமிழகத்தில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக டெண்டர்கள் விடப்பட்டன. வெளக்கமாறு (துடைப்பம்) கூட வாங்க முடியாத நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் இருந்தன. அவர்கள் (அதிமுக அரசு) தான் வாங்கி கொடுக்கும் நிலை இருந்தன. ஆனால் திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளே டெண்டர் விட்டு பொருட்கள் வாங்கிக் கொள்ள தமிழக முதல்வர் உள்ளாட்சி அமைப்புகளான உரிமையை வழங்கியுள்ளார்.
ஊராட்சித் தலைவர்களின் படியையும் தமிழக முதல்வர் உயர்த்தி உள்ளார்.அரசு கஜானாவே காலியாக உள்ளது. புதுப்புது திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நெருக்கடியிலும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறம்பட செயல்பட்டு தமிழக அரசு நிர்வாகத்தை திறமையாக நடத்தி வருகிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் உயரும், தொழில் வளர்ச்சி பெறும், பல்வேறு திட்டங்கள் மக்களை வந்து சேரும் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.