தூத்துக்குடியில் மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த ஜெபசிங் என்ற இளைஞர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20). திரு.வி.க நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் மகன் சு.மாரிமுத்து (23). நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்தவர் குழந்தைதுரை மகன் ஜெபசிங் (23). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். கூலி வேலை செய்து வருகிறார்கள். நேற்று இரவு 3 பேரும் காலையில் நடந்த ஒரு நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் இரவு 10 மணி அளவில் தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
மேலும், போதை அதிகமானதால் மூவரும் அங்கேயே படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கிச் சென்ற ரயில், தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாரிமுத்து மற்றும் மற்றொரு மாரிமுத்து மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஒருவரின் தலை துண்டானது. தண்டவாளத்தின் அருகில் தூங்கியதால் ஜெபசிங் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், தூத்துக்குடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு 2 சடலத்தையும் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெபசிங் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரயில் விபத்தில் பலியான சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். தற்போது அவர் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காளி பாண்டி மகன் மாரிமுத்து மீது வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளன. இவரும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெபசிங் மீது சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Must Read : முட்டத்தில் தாய்-மகள் கொலை... முக்கிய தடயமாக கிடைத்த மங்கி குல்லா - வீடியோ வெளியிட்ட டி.எஸ்.பி
மூவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் இந்த சம்பவத்தில் வேறு எதுவும் காரணம் உள்ளதா என்ற கோனத்திலும் விசாரணை நடந்து வருகிறது. தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது ரயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - பி. முரளிகணேஷ், தூத்துக்குடி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.