முகப்பு /செய்தி /தேனி / பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் மீது இளம்பெண் பாலியல் புகார்... தேனியில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணி

பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் மீது இளம்பெண் பாலியல் புகார்... தேனியில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணி

பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் மீது இளம்பெண் பாலியல் புகார்

பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் மீது இளம்பெண் பாலியல் புகார்

Crime News : தேனியில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் மீது இளம்பெண் பாலியல் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கடந்தாண்டு பெரியகுளத்தை சேர்ந்த இளம்பெண் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் கடந்தாண்டு மார்ச் 14ல் ஜவுளிக்கடை உரிமையாளர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், ஏப்ரலில் சரணடைந்த அவர் பின்னர் நீதிமன்ற ஜாமினில் வெளியில் வந்தார்.‌ இதையடுத்து திருமணம் செய்துகொண்டு தன்னுடன் வாழ மறுப்பதாக கூறி சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடையினுள் இளம்பெண் கடந்த ஜூன் மாதம் புகுந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, பெண்ணின் போராட்டத்திற்கு ஆதரவாக சில அமைப்புகளும் ஜவுளிக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது. பின்னர் ஜூன் 21 அன்று கடைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணை மகளிர் போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்து பின்னர் பினையில் விட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த இளம்பெண் மீது தேனி மற்றும் சின்னமனூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, தேனி மாவட்டம் கம்பம் பகுதியை முகமது ரபீக்(58) என்ற தொழிலதிபர் உணவகம், ரியல் எஸ்டேட் மற்றும் கேரளாவில் குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயமும் செய்து வருகிறார். உடல்நல குறைவால் சிகிச்சையில் இருந்த அவரது மனைவி கடந்தாண்டு நவம்பர் 11-ம் தேதி  உயிரிழந்தார். மனைவி இறந்த சோகத்தில் இருந்த தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.10.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு தன்னை இந்த இளம்பெண் ஏமாற்றியதாக புகாரளித்திருந்தார். மேலும் அவருக்கு உதவியாக 2 பெண்களும் செயல்பட்டதாகவும் அவர் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அந்த இளம்பெண் உள்ளிட்ட 3 பெண்கள் மீது கடந்த ஜனவரி 24ம் தேதியன்று வழக்குப் பதிவு செய்த கம்பம் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக முகம்மது ரபீக், இளம்பெண் உள்ளிட்டோரின் ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஜவுளிக்கடை உரிமையாளர் மீதான தனது வழக்கை வாபஸ் பெறுவதற்காகவே இதுபோன்ற பொய்யான வழக்குப்பதிவு நடந்துள்ளதாக  இளம்பெண் தற்போது தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த இளம்பெண் கூறுகையில், “பாலியல் பலாத்காரம், திருமண மோசடி உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில்  ஜவுளிக்கடை உரிமையாளர் முருகன் மீது கடந்த ஆண்டு நான் கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.‌ மேலும் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திலும் முருகன்  தனக்கும் கவுன்சிலிங் நடந்து வருகிறது. எனது வழக்கை வாபஸ் வாங்குமாறு முருகன் தரப்பினர், தொடர்ந்து தனக்கு மிரட்டல் விடுத்து வந்தனர்.

அதனை ஏற்க மறுத்ததால் என் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக எனது சாட்சியங்களாக இருந்த 2 பெண்களை பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கியுள்ளனர்.‌ என்னிடம் வேலை செய்து வந்த2 பெண்கள் தொழில் ரீதியாக இன்னும் சிலரிடம் நான் பேசும் வீடியோ கால், ஆடியோ மற்றும் எனது புகைப்படங்களை மார்பிங் செய்து முகமது ரபீக் என்பவரிடம் நான் பேசியது போல் சித்தரித்துள்ளனர்.

உண்மையாகவே முகமது ரபீக் என்ற நபரை நான் நேரில் சந்திக்கவில்லை. அவருடன் செல்போனில் ஒரு போதும் பேசியதில்லை. இது எல்லாம் சின்னமனூரை சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவரின் தூண்டுதலில் தான் நடந்துள்ளது. அவரின் மகளை  ஜவுளிக்கடை உரிமையாளர் முருகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். சின்னமனூரில் உணவகம் நடத்தி வரும் அவர் மற்றும் கம்பம் முகமது ரபீக் இருவரும் நண்பர்கள்.

இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சதித்திட்டம் தீட்டி எனது வழக்கை திசை திருப்பும் வகையில் இந்த அவதூறு வழக்கை பதிவு செய்ய வைத்துள்ளனர்.‌ அதோடு என் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாகவே வழக்கறிஞர் தயாளன் மற்றும் திமுக பிரமுகர் அரசேந்திரன் ஆகியோர் மூலமாக எனது வழக்கை நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெறச் சொல்லி வீட்டிற்கு வந்தே மிரட்டியுள்ளனர்.‌ மேலும்  மார்பிங் செய்யப்பட்ட எனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நான் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன்.

அதனடிப்படையில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.‌ எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு உயிர் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். என் மீதான மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என ஆட்சியரிடம் புகார் அளித்திருப்பதாகக் கூறினார்.‌ மேலும் பாலியல், திருமணம் மற்றும் பணம் மோசடி என இரு தரப்பினரின் புகார் மீதான வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் முடிவில் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் : பழனிகுமார் - தேனி

First published:

Tags: Crime News, Local News, Theni